உயிர் உள்ள சடலங்கள்

2010/09/26


          
ழைச் சாரலின் நடுவில் மரணத்தின் ஓலம்
கால்கள் இரண்டும் பல மிளந்து
முள்ளந்தண்டில் மின்பாய

மழைச் சாரலின் நடுவில்
மரணத்தின் ஓலம்

காது இரண்டும் செவிடுபட
சத்தங்கள் சித்தத்தை வதைக்கின்றன
சேதி கேக்க வாய்ப்பு இல்லை
சேதத்தின் தன்மை தெரியவில்லை
வேதங்கள் ஓதி விடியல் நோக்க
விடியலும் விரக்தியில் விம்முகிறது

சந்தனக் கட்டையில் பல்லுத் துலக்குவது
பரம்பரை வழக்கம்
சந்தனத்தை உரசி நெற்றியில் இடுவது
பாரம்பரிய விளக்கம்
தூய இருள் - அதற்கு துறவு கோல் ஒளி
துன்பச் சிறை - அதற்கு துறவு கோல் - எந்த வழி


சொந்த மண் தீயின் நாக்கில்
வெந்து தீய்கிறது
வந்த மண் வந்தாரை மீண்டும்
வழி அனுப்புகிறது
எந்த மண்ணை நாங்கள் சுவாசிப்போம்

மழைச்சாரலின் நடுவில் மரண ஓலம்

வேட்டுச் சத்தங்கள் வானைப் பிளக்க 
ஓய்ந்தது அந்த ஓலம் - பாசையும் இல்லை
நாட்டின் நலம் கருதி வீட்டின் சாரலில்
விழுந்தது மழை பெருத்த ஓசையில்
காற்று கதறியது இடியோ அதறியது
விண்ணில் இருந்து மண்ணை நோக்கி
பளிச் பளிச் என்று முத்தமிட்டன – அது மின்னல்

நாட்கள் எண்ணினோம் நாங்கள்
ஒளிந்த தலைகள் மீண்டும் வெளியில் தோன்றின
சேதியேதும் புரியவில்லை ஆனால் - ஓலத்தின்
ஓசை ஒழிந்ததற்கு அர்த்தம் புரிந்தது

அணைகளை தாண்டி வெள்ளம் விரைந்தோட அந்த
வெள்ளத்தின் மேல் செத்த உடல்கள் உருண் டோடியது
சோவென்று புயலும் அவற்றை விரட்டிச் சென்றது

விறைத்த உடலுடன் விம்மாத மனதுடன் விழித்தது 
கண்களில் கண்ணீர் இல்லை
மிதந்த சடலங்களை விரைந்து எடுக்கவில்லை
விலகாமல் நின்ற நாமும் உயிர் உள்ள சடலங்கள்தான்.
READ MORE - உயிர் உள்ள சடலங்கள்

ஊர் வசை

2009/12/21

கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டும் இங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை


நெற்றியிலே பொட்டைக் காணோம்
பக்கத்திலே கணவனைக் காணோம்
காலிலே முள்ளுக் குத்தக்
காப்பதற்கும் செருப்பைக் காணோம்
                                                    (கையிலே)


கண்ணைச் சுற்றி கண்ணீர் உண்டு
உடலை ஒட்டி நோயும் உண்டு
எண்ணம் எல்லாம் பயமும் உண்டு
ஆறுதற்கு - இது காலமும் அன்று
                                                 (கையிலே)


தொடர்ந்த பாவம் நெற்றிவரை
கட்டிய பாவம் கழுத்து வரை
தொட்ட பாவம் வயிறு வரை
விட்டதா பாவம் இன்று வரை
                                     (கையிலே)


கன்னிப் பருவத்திற் கற்சிலையாள்
கற்றாள் நற்பாடம் பொற்சிலையாய்
காதற் கனியொன்று கைப்பிடித்தாள்
தொடர்ந்தாள் நெற்றியில் பொட்டுமிட்டான்
                                                                (கையிலே)


உற்றார் உறவினர் ஊர்வலமாம்
ஊரார் வலம் வரக் கச்சேரியாம்
கற்றார் நல்லதோர் நாள் சொல்ல
காலைப் பனியிலே கல்யாணமாம்
                                                (கையிலே)


பெற்றாள் அவள் பெண் இயந்திரமாம்
கற்றாள் பாடம் கடைசியிலே 
கணவன் பெற்றான் புதிய களியொன்று
கை விட்டான் சலித்தது இவளென்று
                                                      (கையிலே)


உற்றார் மற்றார் சூழ்ந்து வந்து
சுட்டார் வசையால் - செயலிழந்து
செத்தால் உலகம் இனிக்கு மென
இதுதான் முதலும் முடிவுமென
நடந்தாள் - அவனிடம்


கையிலே ஒரு குழந்தை
கழுத்திலே ஒரு குழந்தை
இரண்டு மிங்கு போதா தென்று
வயிற்றிலே மறு குழந்தை-பகீரதன்-
READ MORE - ஊர் வசை

வேலை நிட்சயம்

2009/09/23

வேலை நிட்சயம்
கிடைக்கும் சத்தியம் 
உழைத்து உண்பதே 
வரும்கால லட்சியம் .


வேலை கொடுத்தல் 
தந்தவர் மாணம்-நிலைக்கும் 
தர அவர் மறுத்தால் 
பாவம் அவரை கலைக்கும் .


அதோ வாணம்
   பரந்து கிடக்கு
எந்தன் வாழ்க்கை
   குறுகிக் கிடக்கு .


'வேலை நிட்சயம்'


வேலை ஒன்று கிடைக்காமல் 
என்குடும்பம் பிழைக்காது
வயிறுகள் எரியலாம்
அடுப்பு மட்டும் எரியாது.

வேலைத்தளம் திறந்த்தாலும்
எனக்கு வேலை கிடைக்காது
தேடுவேன்  தேடுவேன் 
கிடைக்கும் வரை ஓயாது.

ஒவ்வொரு மாதமும் 
செலவு நிறைந்துள்ளதே
ஒவ்வொரு நாட்களும்
வறுமை எமைக் கொல்லுதே.

"எங்கள் வாழ்க்கை
என்று உருப்படுமோ"

"வேலை நிட்சயம் 

ஒருவனது திண்டாட்டம் 
அடுத்தவரின் கொண்டாட்டம்
அவர்களின் நிலைகளும் 
என்று வரும் என்னாட்டம்.

சொத்து சுகம் இல்லாமல் 
வாழ்வில் என்ன சந்தோசம் 
காரிலே  செல்வதில் 
இருக்கும் ஒரு உட்சாகம்

குடும்பமும் பிள்ளையும் 
எனது  சந்தோசமே 
வேலை தேடுவது 
எனது போராட்டமே.

என்றோ ஒருநாள் வேலை 
        கிடைத்திடுமே........................ஒழித்தோன்றல் பகீ
(neram-11.14 iravu 29-10-1999) READ MORE - வேலை நிட்சயம்

இதுதான் விலை

2009/05/29
ஆடவர் என்ன விலை? என்ன விலை?
      மீசை உள்ளவர் வாருங்கள் எங்களிடம்
காசுக்கு நாங்கள் பேரம் பேசுபவரல்ல
      காசைக் கொடுத்து ஆண்களை வாங்குபவர்
வீரம் பேசும் ஆண்களுக்கு
      பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
சோரம் போவது நாங்கள் அல்ல
      வீரம் பேசும் ஆண்கள் தான்


உடல் விற்று உலாவும் பெண்களே
      உலகம் அல்ல – ஆனால்
தம்மை தாமே பேரம் பேசும்
      ஆண்களும் அருமை அல்ல
வீட்டுக்குள்ளே கூடுகட்டி
      கூட்டினுள் எமை அமர்த்தி
நாட்டுக்குள் ஆண்மை பேசும் ஆடவரே
      உம்மை பேரம் பேசும் பெண்கள் நாங்கள்
நாளை நாம் உங்கள் வீட்டுக்கு வருவோம்
      அங்கே நீங்கள் சமைந்திருங்கள்
காளை உந்தன் ஆண்மை பார்க்க
      காசுப் பொதிகள் எங்கள் கையில் இருக்கு
சேலை கட்ட தெரியாவிட்டால் தேற்றிக் கொண்டு
      ஆடை மாற்று
சேதி சொல்ல ஆள் வருவார் அதுவரை
      காத்திருங்கள்


நான்கு பேரை கேட்டு உந்தன்
      பெயரை நாங்கள் அறிந்த பின்பு
சேதி சொல்ல ஆள் வருவார்
      அதுவரை நீங்கள் காத்திருங்கள்
கேடு கெட்ட ஆண்களுக்கு
      கோடு போட்டு வீட்டில் வைக்க
பெற்றோர் உமக்கு எச்சரிக்கை
      பொறுப்போடு கண்காணிக்க


நாளை நம்மவர் உன்வீடு வரும்போது – நீ
      தீயவன் எனக் கேட்டால்
கல்யாணச் சந்தையில் உனக்கு கால் ரூபா கூட
      கொடுக்க மாட்டோம்
காலம் தோறும் காத்திருந்து
      கந்தலாகி மனம் உடைந்து
மானங் கெட்டு மனிதர்களிடையில்
      தீய சொற்களுக்குள்ளாகி
கோலம் மாறி களையிழந்து
      காளை என்னும் செருக்கிழந்து
மூளை கெட்டு முதுமை பெற்று
      மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
மரண தேவனுக்கு மாங்கல்யம் கட்டு
- நா. பகீரதன் -
READ MORE - இதுதான் விலை

இன்று ஒரு கடிதம்.....

2008/11/06


ன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன். 


எத்தனையோ கண்டுவிட்டேன்....


பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே.


அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும் அக்காமாறும், அவர்களை பார்த்து கண்ணீர் விடும் எண்ணில்லா மனங்களும், காட்சிகளாய் என் முன்னே வந்து நிற்க.... ஒரு கடிதம் எழுதுகிறேன்.


பாடசாலையிலே சின்னஞ்சிறுவர் நாம் சொந்த உழைப்பினிலே பங்கர் கிண்டியதும், ஓடியாடி விளையாடியதையும் விட சுப்பர்சோனிக்குக்கு பயந்தோடி பங்கருக்குள் பதுங்கியது, பங்கருக்குள் இருந்த பாம்பு கடித்து நன்பன் இறந்ததுவும் நினைவுகளாய் அலைமோத... இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எழுத்துக்கள் முற்றுப் புள்ளியுடன் மோதியும், ஆச்சரிய குறியிடம் அடிபட்டும், கேள்விக்குறியிடம் சிக்குண்டும், எதுகை மோனை போல் சலசலத்தும் வரைகிறது காகித்தில்... "வேண்டாம்" என்று.


நவாலி வெளியிலே அடுக்கடுக்காய் அந்த சகடை போட்ட எட்டும் காற்றில் பறந்து வந்த காட்சிகளும், நெஞ்சுநோவு என்று வழியிலேயே குந்தி இருந்து எம்மை தேவாலத்தை அடையவிடாத காப்பாற்றிய அந்த பெருசும் காட்சிகளாய் வர.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


அப்பாவும் ,அம்மாவும், அக்காவும் , அண்ணாவும், சுற்றமும் அகதியாய் அன்று ஓடியதன் கால் வலி இன்று உணர்ந்திட.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


நெட்டைக்கால் தாத்தாவுக்கு கட்டைக்கால் பொருத்தியதும், கம்பீரமாய் நின்றவர் கூனிகுறுகியதும் நினைவுகளாய் மனதில் விழ... எழுதுகிறேன் ஒரு கடிதம்.


வேந்தன் மாமா வேங்கையாய் ஆகியதும் வெம்பி வெம்பி நாம் அழுததுவும்
பயந்தொடிய அக்காலங்களும் போராட சென்றவர்கட்டு சுட்டனுப்பிய பருத்தித்துறை வடையும் ஞாபகங்களாய் இரைமீட்க... எழுதுகிறேன் ஒரு கடிதம்.தாத்தா மென்று துப்பிய வெற்றிலை சிவப்பு கறை கண்டு அலரித்துடித்த அப்பத்தா- பிரிதொரு நாளில், அப்பாவியாய் குருதிகளுக்கு நடுவில் உறங்கிய காட்சிகளும் நினைவில் வர.... எழுதுகின்றேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"அக் கொடுமைகளை நித்தம் நான் கண்டுகொண்டிருந்தால் எனக்கும் ஒருவித வெறி வந்திருக்கும்... ஆனால் பாதியிலே இங்கு வந்ததால் பயம்தான் வந்ததுவோ? தெரியவில்லை..


ஆதலினால் பயத்துடன் எழுதுகிறேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"
மதிப்புக்குறியவர்களுக்கு, 
என்னை ஜெர்மன் ராணுவ சேவைக்கு அழைத்த அழைப்புக் கண்டேன்.
என்னுடைய நாட்டில் ஏற்பட்ட போர் சூழல்களால் நானும் என்னுடைய பெற்றோர்களும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உடலளவில் நான் ஜெர்மன் நாட்டு படையில் சேர தகுதி பெற்றிருந்தாலும் மனதளவில் நான் தயாரில்லை. எனினும் எனக்கு தெரியும். கட்டாய சேவை செய்தே ஆகவேண்டும் என்று. ஆகவே எனக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ராணுவ சேவையை சமூகசேவையாக மாற்றிதருமாறு வேண்டுகிறேன்.

வேண்டுதலுடன்
ஜீவன்.


(யாவும் கற்பனையல்ல)
READ MORE - இன்று ஒரு கடிதம்.....

அழகு ஆறு

2007/05/01

"னக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:

1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.

அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }

2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.

ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )

3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே

நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.

4.இசையே என் காதலி

இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.

5.தமிழ்

நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.

6.எங்கள் குடும்பம்

பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.சரி எல்லாம் முடிந்தது நம்ம பங்குக்கு மூன்று பேரை அழைக்க வேண்டும். அவர்கள்

சுதேசன்
லோகா
கோபு

READ MORE - அழகு ஆறு

வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

2007/03/03


இது வேலையில்லாமல் ஊர்சுற்றும் சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மிகவும் பயனுள்ள விடயம்.


ஜெர்மனியை பொருத்தவரை வேலையில்லாத்திண்டாட்டம் பெரும் பிரச்சனை. காரணம் ஜெர்மனியிலிருந்த பல தொழிற்சாலைகள் இடம் பெயருவதுதான். இடம்பெயர அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். சரி அது எல்லாம் நமது சின்ன மூளைக்கு விளங்காத விடயம். இப்ப நான் உங்களுக்கு சொல்ல வந்த விடயமே வேற.


வீட்டுக்குள்ளிருந்து பணம் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று புருவத்தை உயர்த்தி நீங்கள் கேட்பது புரிகிறது.
இதோ அதற்கான மிகச்சிறந்த , நம்பிக்கையான , ஒரு செலவும் இல்லாத வழி இது. (இதை என்னுடைய தங்கைகளும் கையாளுகிறார்கள்) நீங்களே முதலாளி , நீங்களே தொழிலாளி.


அதாவது நீங்கள் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் பணம் அறவிடலாம்.பலசரக்கு கடைக்கு அம்மாவுடன் போனால் ஒரு குறிப்பிட்ட காசு, வீட்டை சுத்தம் செய்தால் ஒரு தொகைப்பணம் என்று (அதிகம் கூடாது 0.50சதம் தொடங்கி 5 யூரோ வரை, தங்களுடைய நாட்டு பணத்திற்கு ஏற்ப நீங்களே மாற்றிக்கொள்ளலாம்.) ஒரு விலைப்பட்டியல் தயார் செய்து தங்களுடைய வீட்டிலிருக்கும் பணமுதலைகளிடம் கொடுக்கலாம்.(யாரிடம் அதிகம் பணம் புளங்கிறதோ அவர்களே இதற்கு சரியான தெரிவு)
இந்த திட்டத்துக்கு அவர்கள் மறுக்கும் பட்சத்தில் வேறு வழி மேற்கொள்ளலாம்.


அது பிளாக்மெயில் (பயமுறுத்துதல்) :-)). அவர்கள் உங்கள் மேல் பொலிஸ் கேஸ் போடாமல் இருக்கும் படியான எத்தனையோ பிளாக்மெயில்கள் இருக்கு. உ+ம் : இவ்வளவு காசு தந்தால் தான் நான் போய் குளிப்பேன் , ..................... , பல பலஇத்தகவல்கள் வீட்டிலிந்து பணம் சம்பாதிக்க உதவும் என நம்புகிறேன்.


{ஹா ஹா இல்லை என் பதிவை அதிகம்பேர் பார்வையிட வைக்க முடியும் என்று என் நன்பனுடன் ஒரு சின்ன பெட். அடுத்த முறை ஏதாவது பிரியோசனமா எழுதுகிறேன்.ஹா ஹா}
READ MORE - வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க.....

காதலாம் காதல் கன்றாவிக் காதல்

2007/01/24நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது


போ என்றேன் போனாய்

வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறதுஏன் இப்படியென்றபோது எல்லாமே

என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்

போயேபோய் விட்டாய் நல்லவேளை

ஏனென கேட்கவில்லை கேட்டிருந்தால்
என்மீது கொண்ட காதலால் என்றிருப்பாய்.

-Sutheesan-


READ MORE - காதலாம் காதல் கன்றாவிக் காதல்

இது என்ன அதிசயம்.

2007/01/12
உன்னைக் கண்டதும் - என்
கண்கள் இமைக்க மறுக்கின்றன என்கிறாய்.
அடி போ இது என்ன அதிசயம்
உன்னைக்கண்டதும் என் இதயமே
துடிப்பதில்லை.

READ MORE - இது என்ன அதிசயம்.

ஆணின் பார்வையில் பெண்

2006/10/23


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

-சுதேசன்-
READ MORE - ஆணின் பார்வையில் பெண்

நாளையும் தொடரும் காதல் காவியம்

2006/09/16என் இனியவளே
உன் ஓரப் பார்வையாளே
என்னை உன்னருகே இழுத்தவளே
ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்
உன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே


உன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே
நான் தூங்க உன் இதயத்தில்
இடம் வேண்டும் என்றவளே
உன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே
எனை கட்டியணைத்து முத்தமிட்டவளே


பேசிப் பேசி எனக்கு
உனைப் புரிய வைத்தவளே
நான் பேசாமலே - என்னை
புரிந்து கொண்டாவளே
நம் உறவுக்கும் - ஓர்
அர்த்தம்வேண்டும் என்றவளே
எனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே


கைகளாளே எனை சிறை பிடித்தவளே
கட்டியணைத்து - என்
இதயதுடிப்பை கணக்கொடுத்தவளே
இப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே
நிலவுதான் என் நெஞ்சில்
தலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே
வெட்கியே என் வேர் அறுத்து
நிலத்தில் எனை சாய்தவளே


என் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட
எனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே
உனை தொட்ட எவர்தான்
உனை விட்டுபிரிவார் - நானும்
அப்படியே என்றதுமே
சத்தமாய் சிரித்து - என்
சத்தையேல்லாம் உறிஞ்சியவளே


இப்போது என் அம்மா - இங்கே வந்தால்
என்ன செய்வாய்யென வினாத்தொடுத்தவளே
"அத்தை" என்பேன் என்றதுமே
புன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே
திரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே
உன் அன்பு சிறையிலிருந்து
என்னை விடுவிக்க நினைத்தவளே


என் இதயத்தை புண்ணாக்கியவளே
என் உயிரை எடுத்தவளே
நோய்யுற்ற நான் காத்திருப்பேன்
நாளையும் நீ காதலுடன் வந்து
எனக்கு மோட்சம் அழிப்பாயேன
போய் வா தோழியே
என் உயிரே
நம் காதல் - காவியத்தை
நாம் நாளை தொடர்வோம்
அதுவரையில்...READ MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்

மரணக் "குறி"

2006/07/14மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . )
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! )
நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும்
ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும்
தன்வசம் இழுத்துப்போகையிலேமரணம் ஓர் வினா ( ? )
நோயினால் துன்புறும் மனிதர் தமை
உலகிற்கு அதிபாரமாய் இருக்கும் கயவர்தமை
பூமியிலே விட்டுவைக்கயிலேமரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்மொத்தத்தில் மரணம் ஓர் புதிர்
தவழ்ந்த குழந்தை முதல் தள்ளாடும்
தாத்தா வரை தன்வசம் அணைப்பதால்
மரணம் ஒரு புரியா புதிர்.

READ MORE - மரணக் "குறி"

இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென
சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ..
வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ
தெழிவின்மையும், நீண்டகாலமும்....

அவ்வண்ணமே விழுந்தாலும்
போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள்
"செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார் படை
ஆட்சேர்ப்பு என்ற பொய்யுரைகளாய்..

வடகிழக்கின் சிறார்! படிக்க பள்ளியில்லை,
காக்க காப்பமுமில்லை பொருளாதாரத்
தடையின் எச்சமாகிய எலும்புக்கூட்டங்களாக...

அல்லைப்பிடியிலும், வங்காலையிலும்
தூக்கில் தொங்கவிடவும்,வெட்டிகூறுபோடவும்
இவர்கள் செய்த வினைதான் என்ன?
யாமறிந்த வகையில் ஈழத்தினில் தமிழனாய் தவழ்ந்ததால்

இதனிலும் கேவலம் தொட்டதற்கெல்லாம்
அறிக்கையறிக்கைகளாய் விளாசித்தள்ளும்
சர்வதேச சமூகத்திடம் இந்நேரம் தனில்
"பேப்பரும்,பேனாவும்" இல்லாமல் போனதுதான். :-((

-சுதேசன்-
READ MORE - இதனிலும் கேவலமுண்டோ....

உங்களுக்கு ஆபத்து

2006/05/16


இப்போது எல்லாம் எனது மின்னஞ்சலுக்க ஏராளமான அபாயஒலி எழுப்பும் மின்னங்சல்கள் வந்து குவிகின்றன. அவற்றுள் ஏராளமானவை நமக்கு தேவைப்படாத அலம்பல்களை கொண்டிருப்பதே கண்டிருக்கிறேன். அப்படி வந்தவற்றுள் இதை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் அதை இங்கே பதிகிறேன். இதன் உண்மை நிலவரம் நானறியேன்.


விடயம் இதுதான்:-

நாம் தினமும் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்துகொண்டு லொட்டு லொட்டு என்று தட்டிக்கொண்டும் சும்மாயிருக்கின் மவுஸை பிடித்து விளையாடிக்கொண்டும் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டும் இருக்கின்றோம்.

நம்முடைய விரல்களின் அசைவுகளை கொஞ்சம் கவனியுங்கள். நாள் முழுவதும் ஒரே மாதிரியான அசைவுகள்தான். கைகளை தட்டச்சுப்பலகையின் அருகே வைத்துக்கொண்டு விரல்கள் மட்டும் தேடி தேடி எழுத்துக்களை தட்டச்சு செய்யும். சிலர் கைகள் முழுவதையும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொண்டு சென்று தட்டச்சு செய்வார்கள்.

இந்த தொடர் அசைவுகள் மணிக்கட்டின் தசைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்மானத்தைக் கொடுக்கின்றது.இந்த அசைவுகள் நமக்கு சாதாரணமாய்த் தெரிந்தாலும் ஆனால் அதன் பிண்ணனியில் உள்ள பயங்கரத்தைக் கவனியுங்களேன்.
இந்த அறுவைச்சிகிச்சையினைக் கவனிங்கள்.. இது ஏதோ பெரிய விபத்துக்களின் மூலம் நடந்ததல்ல..தினமும் தொடர்ந்து தட்டச்சு செய்ததனால் வந்த வினை இது.

இந்த அறுவைச்சிகிச்சைகக்கு உங்களுடைய மணிக்கட்டும் மாட்டவேண்டுமா?

இந்த ஆபத்திலிருந்து விடுபட கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் இந்த கீழ்கண்ட பயிற்சியை தினமும் 10 அல்லது 15 வினாடிகள் ஒவ்வொரு பயிற்சிக்கும் செலவழித்து கையை காப்பாற்றுங்கள்.இந்தப்பயிற்சியை தினமும் 3 தடவைகள் செய்தால் போதும். இதற்காக தனியாகவெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

சாப்பாடு நேரம் அல்லது நண்பர்களோடு அரட்டை அடிக்கின்ற நேரம் அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது அல்லது காரில் டிராபிக்கில் மாட்டியிருக்கும் பொழுது என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தப்பயிற்சியை செய்யலாம்.

மணிக்கணக்கில் வேலை பார்த்து ...மணிக்கட்டை இழக்காதீர்கள்!மணி நேர பயிற்சிக்கு...மனம் ஒதுக்குங்களேன் நண்பர்களே!

READ MORE - உங்களுக்கு ஆபத்து

அன்னையே....

2006/05/14
ஓர் அன்பு அமுதசுரபி அம்மா."அம்மா"
மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"


தாயே உன்னை தள்ளி வைத்து வாழும் தரங்கெட்டவரை மன்னித்துவிடு.

"என் வலிதான் பெரிது"
உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......


{கவிவடித்த சுதேசனுக்கு நன்றி}

READ MORE - அன்னையே....

வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)

-- லோகா --
READ MORE - வதை

பாழாய்ப்போன கட்டெறும்பு

2006/03/05

கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி நாளைக்கு ஞாயிறு ஆயிற்றே நிறைய பேர் ஒன்லைனில(Online) :-)) சும்மா வெட்டியா அலைந்து கொண்டிருப்பாங்கள். அதில ஒருசிலராது இங்க வருவாங்கள் இல்லையா அவங்கள் படிக்க லோகா எழுதின இந்த கவிதையை இங்க போடலாம் என்று தீர்மானித்து இந்தப்பதிவு. சரி விடயத்துக்கு வருவம்.

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -
READ MORE - பாழாய்ப்போன கட்டெறும்பு

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

2006/03/04

உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.


-சுதேசன்-

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.
READ MORE - ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

முத்தமிட்ட அவள்!

2006/01/24

கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்"
கனியமுதே!" என்றேன்"
என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!

- லோகா -

"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

{லோகா தானும் ஒரு வலைப்பூவை உருவாக்கியுள்ளார். அவரின் வலைப்பூவை பார்வையிட இங்கே சுட்டவும்.}
READ MORE - முத்தமிட்ட அவள்!

மீனாப்பீத்தல்

2006/01/06

எனக்கு கொஞ்சநாட்களாகவே மனதுசரியில்லை. காரணம் தெரிந்தும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏண்டா பிரான்ஸ் போனோம் என்றிருந்தது. கிடைத்த விடுமுறையில் சென்ற வருடம்போல் நன்பர்களுடன் உள்நாட்டுக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம். ம்... தவறவிட்டுவிட்டேன். பிரான்ஸ் சென்றதால் எனக்கு சொந்தமானது இரண்டே இரண்டுதான். ஒன்று சில புதிய திரைப்படங்களின் DVD. மற்றது மனதுக்கு கனமான சில விடங்களும்தான்.

நான் ஈழத்தில் இருந்த அந்த சிறிய பிராயத்தில் என்னோடு விளையாடுவதற்காக ஒரு பட்டாளம் சுற்றித்திரியும்.பண்ணிரண்டுவயதிலேயே எனக்கு ஏகப்பட்ட நன்பர்கூட்டம். அது ஏனோதெரியவில்லை இன்று வரை அப்படித்தான். அந்த சிறுவயது கூட்டத்தில் என்னோடு விளையாடியவள்தான் மீனாட்சி என்கிற "மீனா". மீனாட்சி என்பதைவிட நாங்கள் மீனா என்றே அவளை நக்கலாக கூப்பிவோம். அப்போது ஒரு நடிகை அந்தப்பெயரில் இருந்ததால் அவள்பெயர் பிரபலம். என்னுடன் வேறு தோழிகளும் விளையாடியிக்கிறார்கள். ஆனால் அவள் தனிரகம்.

அவள் பார்க்க அழகாகவே இருப்பாள். மற்றவர்களைபோல் அல்லாது என்னுடன் கூடுதலான பழக்கம் கொண்டவள் அவள். மற்றவர்கள் எல்லோரையும் பாடசாலையிலும் விளையாடும் அந்த மணல்குவியலிலும் சந்திப்பதோடு சரி, ஆனால் இவள் என்வீட்டிற்கு பக்கத்திலேயிருப்பதால் வீடு வரை வந்து கழுத்தறுப்பாள். :-)) ஆம், பலவேளைகளில் அவள் எனக்கு ஆபத்தானவள். பாடசாலையில் வீட்டுப்பாடம் செய்யாமல் போனதால் வாங்கிய அடியிலிருந்து, விளையாட்டின்போது சக தோழர்களுக்கு நான் கொடுத்த அடிவரை வீட்டிற்கு வந்து என் அம்மம்மாவிடம் (என் சிறுவயது வில்லிகளில் ஒருவர்) ஓதிவைப்பாள். மிச்சத்திற்கு ஒவ்வொரு மாலை வேளைகளிலும் எங்கள் வீட்டிற்கு படிப்பதற்காய்வந்துவிடுவாள். ஆசிரியை வேறு யாருமல்ல என் அம்மாவின் இளையதங்கை. அவள் கணக்கில் பிழைவிட்டாளும் என் அன்ரியின் கை பதம்பார்ப்பதோ என் தலையைத்தான். அதற்கு விளக்கம் கேட்டால் நீ எங்கட வீட்டு பிள்ளையடா, உனக்கு அடிக்கலாம் அவளை எப்படி? என ஒரு விண்ணானவிளக்கம் வேறு சொல்வாள்.

என்றாலும் மீனாமேல் எனக்கு கோவம் வந்ததில்லை. பாடசாலையில் அவள் எனக்கு அழிறப்பர்,கட்டர்,கலர்பென்சில் போன்றவைகளை அவசரத்திற்குதருவது போன்ற பெரிய பெரிய உதவிகளை செய்வதாள் அவளை நான் வெறுத்ததில்லை.:-)) அதுமட்டுமல்ல அவள்தானே எனக்கு அந்த நகைச்சுவைக்குறிய பட்டப்பெயரைக்கூட வாங்கித்தந்தவள். ஆம் ஏதோ ஒரு நாள் விளையாடும்போது என் காட்சட்டை கிழிந்துவிட்டது. அதை கண்டுபிடித்து சொல்லியவள் மீனா.:-)) ஆனால் என்ன என்னுடன் விளையாடிய ஏனைய வானரங்களுக்கு முன்னால் சத்தமாக சொல்லிவிட்டாள். அவ்வளவுதான் எனக்கு பட்டம் ரெடி. கண்டுபிடித்தவள் பெயர் மறக்ககூடாது என்பதற்காக அவள் பெயரையும் சேர்த்து "மீனாப்பீத்தல்" என்ற அந்த கௌரவமான பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்கள்.:-(( அதுமட்டுமா வயது பண்ணிரண்டு என்றாலும் அந்த வானரக்கூட்டம் செய்யாத வேலை ஒன்றுமில்லை. என்பெயருக்கு பக்கத்தில் அவள் பெயரை எங்கள் பாடசாலை பின் சுவற்றில் சேர்த்து எழுதியது, "அவ இவனுக்கு அழிறப்பர் குடுக்கிறா! கட்டர் குடுக்கிறா! இது காதல்தான்" என்று ஆளாலுக்கு கதை அழந்துதிரிந்தது. அப்பப்பா.... என் வாழ்க்கையில் மீனாவை மறக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது.

அதன்பின் இலங்கையில் நடந்த போராட்ட சூழ்நிலைகளால் எங்கள்குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தது. எனக்கு புதிய நன்பர்கள் கிடைத்தார்கள். பழைய நன்பர்கள் மறைந்தார்கள். மீனாவின் நட்பும் மறைந்தது. அங்காங்கே நன்பர்கள் கிடைப்பதற்கும் மறைவதற்கும் காரணமாக என் நாட்டு போர்ச்சு10ழல் அமைந்தது. கடைசியாக கொழும்பிற்கு வந்தபின் சில நிரந்தர நன்பர்கள் கிடைத்தார்கள். அதன்பின்தான் என்வாழ்க்கைமுறை மற்றும் என் வாழ்க்கைப்பாதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. சில சில நேரங்களில் என் சிறுவயது தோழர்களை சந்தித்தும் இருக்கிறேன். ஆனாலும் மீனாபற்றிய தகவல் ஏதும் எனக்கு கிடைத்ததில்லை. அதன்பின் ஜெர்மனி வாழ்க்கை... முற்றாகவே அவர்களை மறந்திருந்த நாட்கள்....

ஆனால் இந்த முறை பிரான்ஸ் சென்றபோது அங்கே கண்டவை மீண்டும் என் பழைய நிகழ்வுகளை அசைபோடவும் அழுதுகொட்டவும் வாய்ப்பாய் அமைந்தது. ஆம் என் சிறுவயதுத்தோழி மீனா அங்கேதான் இருக்கிறாள். அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையிருக்கிறது. அவள் முகத்தோற்றத்தில் பெரிதாய் ஏதும் மாற்றமில்லை, ஆனால் அவள் முகம் சிறுவயதில் கண்டதுபோல் செழிப்பாயில்லை. அதற்கு காரணம், அவள் கணவன் அவளுடன் இல்லை. ஆம் அவன் அவளுடன் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே இல்லை. போர் அவளை இளம்விதவையாக்கிவிட்டது. கணவனை இளந்த அவள் மறுமணம் செய்துகொள்ளவுமில்லை, அவளை மறுமணம் செய்துகொள்ள ஒருவரும் முன் வரவுமில்லை. இன்று அவள் பிரான்ஸ்சில் போராடிவாழ்கிறாள். நான் அங்கே சென்றதும் என்னை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டவள், அன்பாய் குசலம் விசாரித்தாள். போர்ச்சு10ழலால் தனக்கு பதினேட்டு வயதிலேயே பெற்றோர் திருமணம் செய்துவைத்ததையும், தன் கணவன் உயிரை ஒரு செல் எடுத்துச்சென்றதையும், தானும் தன் குழந்தையும் பல கஸ்டங்களுக்கு அப்புறம் ஒரு வழியாக தன் அண்ணன் உதவியுடன் பிரான்ஸ் வந்ததாகவும், இங்கே ஒரு வீடேடுத்து வாழ்வதாகவும் கூறினாள்.

அவள் கதை என்னை மிகவும் வருந்த வைத்தது. இவளைப்போல் எத்தனையோ பெண்கள் நம்நாட்டில் நிலவும் போரினால் விதைவையாக்கப்பட்டுள்ளார்களே அவர்களின் கதியை நினைக்கும்போதும் நெஞ்சம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடைத்தது. மீனா ஒரு பாவப்பட்ட பெண்தான். சிறிய வயதில் திருமணவாழ்க்கை, இரண்டே வருடதாம்பத்திய வாழ்க்கையின்பின் ஏற்பட்ட கணவனின் இழப்பு. என்ற கொடுமையான சுறாவளிகள் அவள் வாழ்க்கையில் வீசினாலும் தற்போது அவளுக்குள்ள ஒரு நல்ல அண்ணனாலும் அவள் வாழும் இந்த ஜரோப்பிய நாட்டினாலும் அவள் தன் வாழ்வை சவாலோடு எதிர்கொள்ளலாம். அதற்கான வாழ்க்கைச்சு10ழல் அவள் வாழும் இந்நாட்டில் இருக்கிறது. உண்மையில் கொடுத்துவைத்தவள்தான். ஆனால் இவளைப்போல் ஒரு உதவியுமின்றி தாயகத்தில் இருப்பவர்கள் நிலை. (?)

இவர்களை வாழவைக்க,இவர்களுக்கு உதவிசெய்ய,இவர்களின் மனச்சுமையைக்குறைக்க தாயகத்தில் ஏதும் நிறுவனம் செயற்படுகிறதா? தெரியவில்லை.அப்படியேதுவும் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய யார் முன்வருவார்கள்? போரினால் ஏற்படும் பாதிப்பையோ அல்லது இயற்கை அனர்த்தம் நடந்தபின் செய்யவேண்டிய செயற்பாடுகளையோ இல்லை உதவிகளையோ புலம்பெயர் வாழ்மக்கள் புரிந்துகொள்ளும் அளவு இந்த வாழ்க்கைப்போராட்டத்தை புரிந்துகொள்வார்களா? என்ற பற்பல கேள்விகள் என் மனதில் இப்போ கொஞ்சநாட்களாகவே எழுந்து கொண்டிருக்கிறது.:-(( பதில் காணமுடியாத புதிர்களாக.
READ MORE - மீனாப்பீத்தல்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users