நான் தூங்கிவிட்டேன்

2005/08/21


ன்று ஞாயிற்றுக்கிழமை தற்போது 16:32 மணி நான் தூங்கிவிட்டேன்.


என் 24 வயதில் என் தாய் நாட்டை மட்டுமல்ல. என் தாயையும் என் சகோதரிகளையும் விட்டு கண்ணீரோடு பிரிந்த வலி இன்றும் என் மனதில் மாறா வடுக்களாய். எத்தகைய ஒரு துன்பமது. எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் சரி என் தாய் முகம் கண்டால் அவை அடுத்த நிமிடம் இல்லாமல் போகும் மாயம் தான் என்னவோ? என் தோழிகளாய் இரண்டு தங்கைகள். இறைவன்தந்த அற்புதமான தோழிகள் அவர்கள். அப்பாவின் பிரிவின்போது நான் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் அவர்கள் அன்று ஆறுதல் கூறிவழியனுப்பினார்கள். அழுகைவந்தாலும் அடக்கிக்கொண்டு என்னை நம்பி உள்ளவர்கள் அழகூடாது என்பதற்காய் வைராக்கியமாக விமானம் ஏறினேன்.


அன்னையில்லா தங்கையில்லா நாட்டில் எப்படி வாழ்வது? அவர்கள் முகங்கள் எங்கே? சத்தியமாக சத்தம்போட்டே அழுதுவிட்டேன். மிகப்பெரியசத்தம்கூட வெளியே போகமுடியாத அடைபட்ட அறைக்குள் இருந்து அழுதேன். அறை மட்டுமல்ல என் வாழ்க்கையும் அப்படித்தான் உணர்ந்தேன் முதலில்.


வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நம்பிக்கை வரதொடங்கிவிட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனைய தமிழர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் ஒரிரு நன்பர்களை பெற்றுவிட்டேன். அதுமட்டுமா! என் இரண்டு தங்கைகளுக்கும் ஒருவழியாக திருமணம் முடித்து வைத்துவிட்டேன். அய்யோ எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அம்மாவும் தங்கைகளும் எனக்காய் ஒரு பெண்பார்த்திருக்கிறார்கள். ஆம் எனக்கு திருமணம். என்னை புரிந்துகொள்ள, நான் இந் நாட்டிலே பட்ட துன்பங்களை சொல்லி அவள் மடியில் விழுந்து அழ மீண்டும் ஒரு தோழி கிடைக்கப்போகிறாள். என்னை புரிந்து கொண்ட ஒருத்தி....


திருமணம் ஆகிய புதிதில் என்னவளில் கண்ட மகிழ்ச்சியை தற்போது காணமுடியவில்லையே! என்ன காரணம்? புரியவில்லை பழ நாட்களாய்........ புரிந்து கொண்டேன் ஒரு நாள். அவள் தன் தோழியிடம் போனில் பேசும்போது. நான் பார்க்கும் கூலி வேலை அவளுக்கு பிடிக்கவில்லையாம்.எனக்கு மொழி தெரியாதாம். எனக்கு தலையில் முடியில்லையாம். நான் அவளைவிட சற்று குள்ளமாம்.நாகரிகமாக உடையுடுத்த தெரியாதாம். அதனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம்.


அட அட என்னில்தான் தப்பு. அவளின் ஆசைகளை புரிந்து கொள்ள தெரியவில்லை. அவளுக்கு பிடித்த மாதிரி உடையணிந்து அவளுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிசென்றிருக்கவேண்டும். அவளின் குறைகளை வேறு விதத்திலாவது பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் அதையும் செயற்படுத்திப்பார்த்தேன்.


எனக்கு பிடிக்கவில்லை இந்த உடை. என்ன இது நிம்மதியாக நடக்ககூட முடியவில்லை. அவ்வளவு இறுக்கமான உடை. ஆனால் அவள் முகத்தில் ஏதோ ஒரு சிறிய சந்தோசம். பொருத்துக்கொண்டேன்.
ஜயோ என் ஆசைப்படி எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தார்கள்.... நான் சந்தோசமாக இருக்கிறேன்.சில நாட்களில் மீண்டும் அவள் முகம் வாடி இருந்தது.இந்த முறை எனக்கு அவளுக்காய் இறங்கிப்போக மனமில்லை. வேண்டும் என்றால் அவள் இறங்கிவரட்டும் என்ற இறுமாப்போடு இருந்துவிட்டேன். ஆனால் அவள் இறங்கவுமில்லை இரங்கவுமில்லை. மீண்டும் நான் அவளின் குறை எதுவேன அறிய ஆவலாய்.


அவளுக்கும் அதுவே பழகிப்போய்விட்டது. விட்டுக்கொடுப்புக்கள் எல்லாம் நான்தான் செய்தேன். அதை அனுபவிப்பது மட்டுமே அவள்வேலை. என் வாழ்க்கையின் வேதனை தொடர்ந்தது. அவளுக்கு வர வர இந்த உலகில் என்னைத்தவிர எல்லாமே பிடித்திருந்தது. அயலவர்களிடம் கூட என்னை மிக மட்டம்தட்டி கதைப்பது அவளுக்கு பிடித்த செயலாக மாறிவிட்டது. நான் நன்பராக நினைத்த நன்பர்கள் கூட எங்கள் வீட்டுக்கதையை வீதிகளில் கூறித்திரிந்தார்கள்.அதற்கு காரணகர்த்தா என்னவளே! வாழ்க்கையே வேறுத்துவிட்டது.


நான் அவளிடம் எத்தனையோ தடவை கூறிவிட்டேன். அவள் என்கதையை கணக்கிலேடுப்பதேயில்லை.ஆனாலும் நான் மனம்தளரவில்லை. பொறடி பொறு என் பிள்ளைகளை வைத்தே உன்னை என் வழிக்கு கொண்டு வருகிறேன் பார். என்ற இறுமாப்போடு வாழ்ந்துவந்தேன். எனினும் என் மனம் ஏனோ சில நாட்கள் என்னையே நொந்துகொள்ளும். இது என்ன வாழ்க்கை... ச்சீ......


என் நம்பிக்கையே என் பிள்ளைகள்தான். ஆனால் அவர்களும் என்னை புரிந்து கொள்வார்கள்போல் தெரியவில்லை. அவர்கள் தாய் செய்வதே சரி என்று ஓம் போடுகிறார்களே. ஓ.... இப்பதானே அவர்களுக்கு பதின்ஜந்து வயது. சிறுவர்கள்தானே.என நினைத்து மனதைத்தேற்றிக்கொண்டேன். என்செல்வங்களா! நீங்களும் என்னை புரிந்து கொள்ளாவிடில் என் வாழ்கைக்கே அர்த்தமில்லாமல்போய்விடும். தயவுசெய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். Please


இல்லை அவர்களும் தாய்மாதிரித்தான். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. என் கதையை காதில்கூட விலுத்துவதில்லை.இப்போ நான் ஏனோ தெரியவில்லை. சில நேரங்களில் தனிமையில் கதைக்கிறேன். எனக்கு என்ன நடந்தது? என்னுடன் வீட்டிலும் கதைக்க ஒருவரும் தயாரில்லை. வெளியிலும் ஒருவரும் தயாரில்லை. ஏன் ?


என் மகள்மாருக்கு 19 வயதாகிவிட்டதாம். என்னும் தாயகத்திலிருக்கும் அவர்களின் பாட்டியை பார்த்ததில்லையாம். இந்த வருடம் இலங்கை போறதாம். ஜயோ மீண்டும் எனக்கு தலைகால் புரியாத சந்தோசம். எங்கட அம்மாவையும் தங்கைகளையும் பார்க்க போகபோகிறோம்.அம்மா மடியில் கிடந்து நடந்ததையேல்லாம் சொல்லி அழவேண்டும். என்ற எதிர்பார்ப்பு. இல்லை வேண்டாம், என் துன்பம் என்னோடே போகட்டும். ஜயோ நான் இப்ப சந்தோசமாக இருக்கிறேன்.


என்ன இது நடக்கிறது!. ஏன் நான் இங்கே நிற்கவேண்டும். நீங்கள் மட்டும் தாயகம் போகபோகிறீர்களா? நான் என்ன இலிச்சவாயனா? எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அன்று வளமைக்குமாறாக காரசாரமான சண்டை நடந்தது. முடிவு வளமைபோல்தான். அவள் வெற்றி. நான் தோல்வி. எனக்கு தற்போது வேலையில்லையாம்.ஆகலும் கடைசி இரண்டு மாதங்களாகதான் நான் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறேன். என் விசாவுக்கு இலங்கை போகமுடியாதாம். இன்னும் எவ்வளவுகாலம் ? விசாமாற்றி எடுக்க எனக்கு நல்லா மொழி தெரியாதாம். இது என் அருமை புதல்விகள் சொன்னது. எப்படியோ என்னை கூட்டிசெல்ல அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவள் சொன்னாள் நான் செய்த வேலையை அங்கே போய் செல்லமுடியாதாம். அது ரொம்ப கேவலமாம். ம்........... அவர்களுக்கு இவ்வளவு காலம் சோறு போட்டதே அந்த வேலைதான்.

இப்ப பாருங்கள் என்னை இங்கே விட்டுவிட்டு அவர்கள் எல்லோரும் தாயகம் போய்விட்டார்கள். நான் தனிமையில்.... எனக்குள் ஒரு வெறுமை நீண்ட காலத்தின் பின் மீண்டும். என்னவோ என்வாழ்க்கையே வீண். வாழ்வதிலும் பார்க்க சாகலாம் போலயிருக்கு.


"என்ன நீ முட்டாளா? நீ எதற்காக சாகவேண்டும். இதை எல்லாம் விட்டுத்தள்ளு. ஏன் வாழ்க்கையில் இன்பமில்லை என்கிறாய்? யார் இவர்கள். உன்னை அடைத்து வைக்க. நீ வாழ்ந்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டாயா? உனக்காக அங்கே பாசத்தை அள்ளித்தர தாய் தங்கைகள் இல்லையா? கணவனை மதிக்கதெரியாதவளுக்காகவும் தந்தையாக பார்க்காத புதல்விகளுக்காக நீ எதற்காக அழவேண்டும். வாழ்க்கையை வெறுக்கவேண்டும். எல்லோரையும் தூக்கி எறி. உன் தாய் நாடு செல். தாய் மடி படுத்து கதறி அழு, ஒரு புதிய வாழ்க்கையை வாழுவாயா அதை விட்டுவிட்டு இது என்ன மோட்டுத்தனம்." என்று ஆறுதல் சொல்லும் உங்களுக்கு என் நன்றி. எனினும்.............


இன்று ஞாயிற்றுகிழமை தற்போது 16:32 மணி நான் தூங்கிவிட்டேன், நிரந்தரமாக தூங்கிவிட்டேன். ஆம் தூக்கில் தொங்கிவிட்டேன்.
(சில சம்பவங்கள் தரும் தாக்கத்தால்)

-தர்சன்-
READ MORE - நான் தூங்கிவிட்டேன்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users