ஆணின் பார்வையில் பெண்

2006/10/23


உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்தம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வை கொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

-சுதேசன்-
READ MORE - ஆணின் பார்வையில் பெண்

நாளையும் தொடரும் காதல் காவியம்

2006/09/16என் இனியவளே
உன் ஓரப் பார்வையாளே
என்னை உன்னருகே இழுத்தவளே
ஒரு நிமிடம் என்றாலும்
ஓர் ஆயிரம் ஆண்டு என்றாலும்
உன்னோடுதான் என் வாழ்க்கை என்றவளே


உன் பாதம் காட்டி எனைக் கொன்றவளே
நான் தூங்க உன் இதயத்தில்
இடம் வேண்டும் என்றவளே
உன் தூக்கத்தை கெடுக்குமெனில் என் இதயத் துடிப்பையும் நிறுத்துவேன் என்றதுமே
எனை கட்டியணைத்து முத்தமிட்டவளே


பேசிப் பேசி எனக்கு
உனைப் புரிய வைத்தவளே
நான் பேசாமலே - என்னை
புரிந்து கொண்டாவளே
நம் உறவுக்கும் - ஓர்
அர்த்தம்வேண்டும் என்றவளே
எனக்கு உன் உயிரையும் கொடுத்தவளே


கைகளாளே எனை சிறை பிடித்தவளே
கட்டியணைத்து - என்
இதயதுடிப்பை கணக்கொடுத்தவளே
இப்படியே நிலவுக்கு போவோமா என்றவளே
நிலவுதான் என் நெஞ்சில்
தலைவைத்து துயில் கொள்கிறது - என்றதுமே
வெட்கியே என் வேர் அறுத்து
நிலத்தில் எனை சாய்தவளே


என் நக இடுக்கிலிருக்கும் அழுக்குகூட
எனைவிட்டு போக மறுக்கிறது - என்றவளே
உனை தொட்ட எவர்தான்
உனை விட்டுபிரிவார் - நானும்
அப்படியே என்றதுமே
சத்தமாய் சிரித்து - என்
சத்தையேல்லாம் உறிஞ்சியவளே


இப்போது என் அம்மா - இங்கே வந்தால்
என்ன செய்வாய்யென வினாத்தொடுத்தவளே
"அத்தை" என்பேன் என்றதுமே
புன்சிரிப்பால் என் நெஞ்சை புண்ணாக்கியவளே
திரும்ப திரும்ப கடிகாரத்தை பார்த்தவளே
உன் அன்பு சிறையிலிருந்து
என்னை விடுவிக்க நினைத்தவளே


என் இதயத்தை புண்ணாக்கியவளே
என் உயிரை எடுத்தவளே
நோய்யுற்ற நான் காத்திருப்பேன்
நாளையும் நீ காதலுடன் வந்து
எனக்கு மோட்சம் அழிப்பாயேன
போய் வா தோழியே
என் உயிரே
நம் காதல் - காவியத்தை
நாம் நாளை தொடர்வோம்
அதுவரையில்...READ MORE - நாளையும் தொடரும் காதல் காவியம்

மரணக் "குறி"

2006/07/14மரணம் அது ஓர் முற்றுப்புள்ளி ( . )
மந்தைகளாய் ஓடி ஆடி இளைத்த
மனிதர்களுக்கு இறைவன் சொன்ன மந்திரம்மரணம் அது ஓர் ஆச்சரியம் ( ! )
நேற்று பிறந்த குழந்தையை சுனாமியிலும்
ரெயிலில் போன என் அன்னையை தீவிரவாதத்திலும்
தன்வசம் இழுத்துப்போகையிலேமரணம் ஓர் வினா ( ? )
நோயினால் துன்புறும் மனிதர் தமை
உலகிற்கு அதிபாரமாய் இருக்கும் கயவர்தமை
பூமியிலே விட்டுவைக்கயிலேமரணம் ஓர் சொல் ( "" )
கவி,கட்டுரை எழுதி காசு பார்க்கும்
கவிஞர்களுக்கும் கற்பனாவாதிகளுக்கும்மொத்தத்தில் மரணம் ஓர் புதிர்
தவழ்ந்த குழந்தை முதல் தள்ளாடும்
தாத்தா வரை தன்வசம் அணைப்பதால்
மரணம் ஒரு புரியா புதிர்.

READ MORE - மரணக் "குறி"

இதனிலும் கேவலமுண்டோ....

2006/06/12தெற்கிலே "அம்மே" யும் வடக்கிலே "அம்மா"வும்மென
சிறார் கூப்பாடு ஒன்றுதான் ஏனோ..
வடக்கின் கூப்பாடு மட்டும் இவர்கள் காதில்விழ
தெழிவின்மையும், நீண்டகாலமும்....

அவ்வண்ணமே விழுந்தாலும்
போர் கொடுத்த விழைவின் அநாதைகளான இவர்கள்
"செஞ்சோலை" தனிலிருந்தால் சிறார் படை
ஆட்சேர்ப்பு என்ற பொய்யுரைகளாய்..

வடகிழக்கின் சிறார்! படிக்க பள்ளியில்லை,
காக்க காப்பமுமில்லை பொருளாதாரத்
தடையின் எச்சமாகிய எலும்புக்கூட்டங்களாக...

அல்லைப்பிடியிலும், வங்காலையிலும்
தூக்கில் தொங்கவிடவும்,வெட்டிகூறுபோடவும்
இவர்கள் செய்த வினைதான் என்ன?
யாமறிந்த வகையில் ஈழத்தினில் தமிழனாய் தவழ்ந்ததால்

இதனிலும் கேவலம் தொட்டதற்கெல்லாம்
அறிக்கையறிக்கைகளாய் விளாசித்தள்ளும்
சர்வதேச சமூகத்திடம் இந்நேரம் தனில்
"பேப்பரும்,பேனாவும்" இல்லாமல் போனதுதான். :-((

-சுதேசன்-
READ MORE - இதனிலும் கேவலமுண்டோ....

உங்களுக்கு ஆபத்து

2006/05/16


இப்போது எல்லாம் எனது மின்னஞ்சலுக்க ஏராளமான அபாயஒலி எழுப்பும் மின்னங்சல்கள் வந்து குவிகின்றன. அவற்றுள் ஏராளமானவை நமக்கு தேவைப்படாத அலம்பல்களை கொண்டிருப்பதே கண்டிருக்கிறேன். அப்படி வந்தவற்றுள் இதை என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை. அதனால் அதை இங்கே பதிகிறேன். இதன் உண்மை நிலவரம் நானறியேன்.


விடயம் இதுதான்:-

நாம் தினமும் கணிப்பொறியின் முன்னால் அமர்ந்துகொண்டு லொட்டு லொட்டு என்று தட்டிக்கொண்டும் சும்மாயிருக்கின் மவுஸை பிடித்து விளையாடிக்கொண்டும் அங்கும் இங்கும் நகர்த்திக்கொண்டும் இருக்கின்றோம்.

நம்முடைய விரல்களின் அசைவுகளை கொஞ்சம் கவனியுங்கள். நாள் முழுவதும் ஒரே மாதிரியான அசைவுகள்தான். கைகளை தட்டச்சுப்பலகையின் அருகே வைத்துக்கொண்டு விரல்கள் மட்டும் தேடி தேடி எழுத்துக்களை தட்டச்சு செய்யும். சிலர் கைகள் முழுவதையும் ஒவ்வொரு எழுத்துக்கும் கொண்டு சென்று தட்டச்சு செய்வார்கள்.

இந்த தொடர் அசைவுகள் மணிக்கட்டின் தசைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்மானத்தைக் கொடுக்கின்றது.இந்த அசைவுகள் நமக்கு சாதாரணமாய்த் தெரிந்தாலும் ஆனால் அதன் பிண்ணனியில் உள்ள பயங்கரத்தைக் கவனியுங்களேன்.
இந்த அறுவைச்சிகிச்சையினைக் கவனிங்கள்.. இது ஏதோ பெரிய விபத்துக்களின் மூலம் நடந்ததல்ல..தினமும் தொடர்ந்து தட்டச்சு செய்ததனால் வந்த வினை இது.

இந்த அறுவைச்சிகிச்சைகக்கு உங்களுடைய மணிக்கட்டும் மாட்டவேண்டுமா?

இந்த ஆபத்திலிருந்து விடுபட கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் இந்த கீழ்கண்ட பயிற்சியை தினமும் 10 அல்லது 15 வினாடிகள் ஒவ்வொரு பயிற்சிக்கும் செலவழித்து கையை காப்பாற்றுங்கள்.இந்தப்பயிற்சியை தினமும் 3 தடவைகள் செய்தால் போதும். இதற்காக தனியாகவெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்.

சாப்பாடு நேரம் அல்லது நண்பர்களோடு அரட்டை அடிக்கின்ற நேரம் அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும்பொழுது அல்லது காரில் டிராபிக்கில் மாட்டியிருக்கும் பொழுது என்று கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தப்பயிற்சியை செய்யலாம்.

மணிக்கணக்கில் வேலை பார்த்து ...மணிக்கட்டை இழக்காதீர்கள்!மணி நேர பயிற்சிக்கு...மனம் ஒதுக்குங்களேன் நண்பர்களே!

READ MORE - உங்களுக்கு ஆபத்து

அன்னையே....

2006/05/14
ஓர் அன்பு அமுதசுரபி அம்மா."அம்மா"
மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"


தாயே உன்னை தள்ளி வைத்து வாழும் தரங்கெட்டவரை மன்னித்துவிடு.

"என் வலிதான் பெரிது"
உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......


{கவிவடித்த சுதேசனுக்கு நன்றி}

READ MORE - அன்னையே....

வதை

2006/03/24

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா)

-- லோகா --
READ MORE - வதை

பாழாய்ப்போன கட்டெறும்பு

2006/03/05

கொஞ்ச நாளாய் ஜயா ரொம்ப பிசி(Busy). :-))அதுதான் தமிழ்கவிதையில என்னால ஒன்றுமே எழுத முடியவில்லை. என்றாலும் என் நன்பர்களினதும் உறவினர்களினதும் கவிதைகளை தூக்கி போட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த ஆக்கத்தை வாசித்ததும் எனக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. சரி நாளைக்கு ஞாயிறு ஆயிற்றே நிறைய பேர் ஒன்லைனில(Online) :-)) சும்மா வெட்டியா அலைந்து கொண்டிருப்பாங்கள். அதில ஒருசிலராது இங்க வருவாங்கள் இல்லையா அவங்கள் படிக்க லோகா எழுதின இந்த கவிதையை இங்க போடலாம் என்று தீர்மானித்து இந்தப்பதிவு. சரி விடயத்துக்கு வருவம்.

பாழாய்ப்போன கட்டெறும்பு

மூன்று நாட்களாய் என தம்பி
மூன்று வேளை சாப்பாட்டை
முறையாக உண்ணவில்லை
ஓரிடத்தில் அமைதியாய்
ஒதுங்கியிருக்கவில்லை
எதையோ தொலைத்தவன் போல்
சோகமாய் இருந்தனன் - காண்
எல்லோர்க்கும் உள்ளது தான் -
தம்பி என்னடா உன் கவலை
இடம்பெயர்ந்து வந்ததாலா? - உன்
நண்பர்களை பிரிந்ததாலா? - இல்லை
வீட்டுப் பொருட்களை இழந்ததாலா? -ஷெல்
வீழ்ந்து செல்வ மண்ணை அழித்ததாலா?
பதிலேதும் சொல்லாமல்
நடந்து கொண்டிருந்தனன்
நிறுத்திக் கேட்டேன்
என்னவென்று சொல்லேனடா
"பாழாய்ப்போன கட்டெறும்பு
கடிக்க வேறு இடமில்லாது
"மும்தாஜி"ன் முதுகிலே
கடித்தது" என்றான் - காண்!

-"சுடர்ஒளி" வாரஇதழ் (29.07.2001) (இலங்கை)-

-லோகா -
READ MORE - பாழாய்ப்போன கட்டெறும்பு

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

2006/03/04

உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமெரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.


-சுதேசன்-

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்டபடைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்
தந்தை என பொருள் படும்.
READ MORE - ஈழத்தமிழன் காதல்கொண்டால்..

முத்தமிட்ட அவள்!

2006/01/24

கண்ணடித்தாள் - தன்
இதழ் கடித்தாள்
கட்டியென்னை முத்தமிட்டாள்
சின்னச் சிரிப்பில் - எனை
சிலிர்க்க வைத்தாள்
"கண்ணே!" என்றேன்"
கனியமுதே!" என்றேன்"
என்னுயிர் நீ!" யென்றேன்
நான் செய்ய எண்ணியவை
அத்தனையும் அவள் செய்தாள்
என்ன தவம் செய்தேனோ - பெண்ணே
உன்னைப் பெறுவதற்கு!
கிளிச் சொண்டை திறந்து - அவள்
"குட்நைட் டாடி!" என்றாள் - ஐந்து
வயது அடையாத என்
மகள் ஆரணி...!

- லோகா -

"சஞ்சீவீ " வார இதழ் (1999) (யாழ். இலங்கை)
"ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

{லோகா தானும் ஒரு வலைப்பூவை உருவாக்கியுள்ளார். அவரின் வலைப்பூவை பார்வையிட இங்கே சுட்டவும்.}
READ MORE - முத்தமிட்ட அவள்!

மீனாப்பீத்தல்

2006/01/06

எனக்கு கொஞ்சநாட்களாகவே மனதுசரியில்லை. காரணம் தெரிந்தும் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏண்டா பிரான்ஸ் போனோம் என்றிருந்தது. கிடைத்த விடுமுறையில் சென்ற வருடம்போல் நன்பர்களுடன் உள்நாட்டுக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம். ம்... தவறவிட்டுவிட்டேன். பிரான்ஸ் சென்றதால் எனக்கு சொந்தமானது இரண்டே இரண்டுதான். ஒன்று சில புதிய திரைப்படங்களின் DVD. மற்றது மனதுக்கு கனமான சில விடங்களும்தான்.

நான் ஈழத்தில் இருந்த அந்த சிறிய பிராயத்தில் என்னோடு விளையாடுவதற்காக ஒரு பட்டாளம் சுற்றித்திரியும்.பண்ணிரண்டுவயதிலேயே எனக்கு ஏகப்பட்ட நன்பர்கூட்டம். அது ஏனோதெரியவில்லை இன்று வரை அப்படித்தான். அந்த சிறுவயது கூட்டத்தில் என்னோடு விளையாடியவள்தான் மீனாட்சி என்கிற "மீனா". மீனாட்சி என்பதைவிட நாங்கள் மீனா என்றே அவளை நக்கலாக கூப்பிவோம். அப்போது ஒரு நடிகை அந்தப்பெயரில் இருந்ததால் அவள்பெயர் பிரபலம். என்னுடன் வேறு தோழிகளும் விளையாடியிக்கிறார்கள். ஆனால் அவள் தனிரகம்.

அவள் பார்க்க அழகாகவே இருப்பாள். மற்றவர்களைபோல் அல்லாது என்னுடன் கூடுதலான பழக்கம் கொண்டவள் அவள். மற்றவர்கள் எல்லோரையும் பாடசாலையிலும் விளையாடும் அந்த மணல்குவியலிலும் சந்திப்பதோடு சரி, ஆனால் இவள் என்வீட்டிற்கு பக்கத்திலேயிருப்பதால் வீடு வரை வந்து கழுத்தறுப்பாள். :-)) ஆம், பலவேளைகளில் அவள் எனக்கு ஆபத்தானவள். பாடசாலையில் வீட்டுப்பாடம் செய்யாமல் போனதால் வாங்கிய அடியிலிருந்து, விளையாட்டின்போது சக தோழர்களுக்கு நான் கொடுத்த அடிவரை வீட்டிற்கு வந்து என் அம்மம்மாவிடம் (என் சிறுவயது வில்லிகளில் ஒருவர்) ஓதிவைப்பாள். மிச்சத்திற்கு ஒவ்வொரு மாலை வேளைகளிலும் எங்கள் வீட்டிற்கு படிப்பதற்காய்வந்துவிடுவாள். ஆசிரியை வேறு யாருமல்ல என் அம்மாவின் இளையதங்கை. அவள் கணக்கில் பிழைவிட்டாளும் என் அன்ரியின் கை பதம்பார்ப்பதோ என் தலையைத்தான். அதற்கு விளக்கம் கேட்டால் நீ எங்கட வீட்டு பிள்ளையடா, உனக்கு அடிக்கலாம் அவளை எப்படி? என ஒரு விண்ணானவிளக்கம் வேறு சொல்வாள்.

என்றாலும் மீனாமேல் எனக்கு கோவம் வந்ததில்லை. பாடசாலையில் அவள் எனக்கு அழிறப்பர்,கட்டர்,கலர்பென்சில் போன்றவைகளை அவசரத்திற்குதருவது போன்ற பெரிய பெரிய உதவிகளை செய்வதாள் அவளை நான் வெறுத்ததில்லை.:-)) அதுமட்டுமல்ல அவள்தானே எனக்கு அந்த நகைச்சுவைக்குறிய பட்டப்பெயரைக்கூட வாங்கித்தந்தவள். ஆம் ஏதோ ஒரு நாள் விளையாடும்போது என் காட்சட்டை கிழிந்துவிட்டது. அதை கண்டுபிடித்து சொல்லியவள் மீனா.:-)) ஆனால் என்ன என்னுடன் விளையாடிய ஏனைய வானரங்களுக்கு முன்னால் சத்தமாக சொல்லிவிட்டாள். அவ்வளவுதான் எனக்கு பட்டம் ரெடி. கண்டுபிடித்தவள் பெயர் மறக்ககூடாது என்பதற்காக அவள் பெயரையும் சேர்த்து "மீனாப்பீத்தல்" என்ற அந்த கௌரவமான பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார்கள்.:-(( அதுமட்டுமா வயது பண்ணிரண்டு என்றாலும் அந்த வானரக்கூட்டம் செய்யாத வேலை ஒன்றுமில்லை. என்பெயருக்கு பக்கத்தில் அவள் பெயரை எங்கள் பாடசாலை பின் சுவற்றில் சேர்த்து எழுதியது, "அவ இவனுக்கு அழிறப்பர் குடுக்கிறா! கட்டர் குடுக்கிறா! இது காதல்தான்" என்று ஆளாலுக்கு கதை அழந்துதிரிந்தது. அப்பப்பா.... என் வாழ்க்கையில் மீனாவை மறக்கவும் முடியாது வெறுக்கவும் முடியாது.

அதன்பின் இலங்கையில் நடந்த போராட்ட சூழ்நிலைகளால் எங்கள்குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்தது. எனக்கு புதிய நன்பர்கள் கிடைத்தார்கள். பழைய நன்பர்கள் மறைந்தார்கள். மீனாவின் நட்பும் மறைந்தது. அங்காங்கே நன்பர்கள் கிடைப்பதற்கும் மறைவதற்கும் காரணமாக என் நாட்டு போர்ச்சு10ழல் அமைந்தது. கடைசியாக கொழும்பிற்கு வந்தபின் சில நிரந்தர நன்பர்கள் கிடைத்தார்கள். அதன்பின்தான் என்வாழ்க்கைமுறை மற்றும் என் வாழ்க்கைப்பாதையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. சில சில நேரங்களில் என் சிறுவயது தோழர்களை சந்தித்தும் இருக்கிறேன். ஆனாலும் மீனாபற்றிய தகவல் ஏதும் எனக்கு கிடைத்ததில்லை. அதன்பின் ஜெர்மனி வாழ்க்கை... முற்றாகவே அவர்களை மறந்திருந்த நாட்கள்....

ஆனால் இந்த முறை பிரான்ஸ் சென்றபோது அங்கே கண்டவை மீண்டும் என் பழைய நிகழ்வுகளை அசைபோடவும் அழுதுகொட்டவும் வாய்ப்பாய் அமைந்தது. ஆம் என் சிறுவயதுத்தோழி மீனா அங்கேதான் இருக்கிறாள். அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தையிருக்கிறது. அவள் முகத்தோற்றத்தில் பெரிதாய் ஏதும் மாற்றமில்லை, ஆனால் அவள் முகம் சிறுவயதில் கண்டதுபோல் செழிப்பாயில்லை. அதற்கு காரணம், அவள் கணவன் அவளுடன் இல்லை. ஆம் அவன் அவளுடன் மட்டுமல்ல இந்த உலகத்திலேயே இல்லை. போர் அவளை இளம்விதவையாக்கிவிட்டது. கணவனை இளந்த அவள் மறுமணம் செய்துகொள்ளவுமில்லை, அவளை மறுமணம் செய்துகொள்ள ஒருவரும் முன் வரவுமில்லை. இன்று அவள் பிரான்ஸ்சில் போராடிவாழ்கிறாள். நான் அங்கே சென்றதும் என்னை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டவள், அன்பாய் குசலம் விசாரித்தாள். போர்ச்சு10ழலால் தனக்கு பதினேட்டு வயதிலேயே பெற்றோர் திருமணம் செய்துவைத்ததையும், தன் கணவன் உயிரை ஒரு செல் எடுத்துச்சென்றதையும், தானும் தன் குழந்தையும் பல கஸ்டங்களுக்கு அப்புறம் ஒரு வழியாக தன் அண்ணன் உதவியுடன் பிரான்ஸ் வந்ததாகவும், இங்கே ஒரு வீடேடுத்து வாழ்வதாகவும் கூறினாள்.

அவள் கதை என்னை மிகவும் வருந்த வைத்தது. இவளைப்போல் எத்தனையோ பெண்கள் நம்நாட்டில் நிலவும் போரினால் விதைவையாக்கப்பட்டுள்ளார்களே அவர்களின் கதியை நினைக்கும்போதும் நெஞ்சம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அடைத்தது. மீனா ஒரு பாவப்பட்ட பெண்தான். சிறிய வயதில் திருமணவாழ்க்கை, இரண்டே வருடதாம்பத்திய வாழ்க்கையின்பின் ஏற்பட்ட கணவனின் இழப்பு. என்ற கொடுமையான சுறாவளிகள் அவள் வாழ்க்கையில் வீசினாலும் தற்போது அவளுக்குள்ள ஒரு நல்ல அண்ணனாலும் அவள் வாழும் இந்த ஜரோப்பிய நாட்டினாலும் அவள் தன் வாழ்வை சவாலோடு எதிர்கொள்ளலாம். அதற்கான வாழ்க்கைச்சு10ழல் அவள் வாழும் இந்நாட்டில் இருக்கிறது. உண்மையில் கொடுத்துவைத்தவள்தான். ஆனால் இவளைப்போல் ஒரு உதவியுமின்றி தாயகத்தில் இருப்பவர்கள் நிலை. (?)

இவர்களை வாழவைக்க,இவர்களுக்கு உதவிசெய்ய,இவர்களின் மனச்சுமையைக்குறைக்க தாயகத்தில் ஏதும் நிறுவனம் செயற்படுகிறதா? தெரியவில்லை.அப்படியேதுவும் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்ய யார் முன்வருவார்கள்? போரினால் ஏற்படும் பாதிப்பையோ அல்லது இயற்கை அனர்த்தம் நடந்தபின் செய்யவேண்டிய செயற்பாடுகளையோ இல்லை உதவிகளையோ புலம்பெயர் வாழ்மக்கள் புரிந்துகொள்ளும் அளவு இந்த வாழ்க்கைப்போராட்டத்தை புரிந்துகொள்வார்களா? என்ற பற்பல கேள்விகள் என் மனதில் இப்போ கொஞ்சநாட்களாகவே எழுந்து கொண்டிருக்கிறது.:-(( பதில் காணமுடியாத புதிர்களாக.
READ MORE - மீனாப்பீத்தல்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users