யாரில் தவறு?

2005/11/03

அண்மையில் கிடைத்தவிடுமுறையில் ஸ்டுட்காட்டில் உள்ள எங்களின் சித்தியின் வீட்டிற்குசென்றோம்.எங்கள் சித்திக்கு ஆறு வயதில் ஒரு மகன் இருக்கிறான். அவன் பயங்கர சுட்டி!.நாங்கள் அங்கே போன மறுநாள் அம்மாவும்,நானும் கடைகளுக்கு போகவேண்டியிருந்ததால் நாங்கள் போகத்தயாராகிக்கொண்டிருந்தோம்.அன்று வேலையில்லாததால் சித்தப்பா வீட்டிலேயே நிற்பதால் சுட்டி(அவனின் பெயரை இப்படியே எழுதுகிறேன்.) பாடசாலையால் வந்தால் சித்தப்பாவோடு நிற்பான் என்ற தைரியத்தில் சித்தியும் எங்களுடன் கடைக்கு சேர்ந்தே வந்தார்.


நாங்கள் மதியம் இரண்டு மணிக்கு வீடுதிரும்பியபோது வீட்டிலிருந்த சில கண்ணாடிப்பொருட்கள் உடைபட்டிருந்தன. சித்தப்பா அவற்றை கூட்டி அள்ளிக்கொண்டிருந்தார். சுட்டி இரண்டு கையிலும் வேவ்வேறு ஜஸ்கிறீமை வைத்து அழுது அழுது குடித்துக்கொண்டிருந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சித்தி"என்னப்பா நடந்தது?" என்று வினாவ. சித்தப்பாவின் குரலில் ஆத்திரம் தென்பட்டது."இந்த குரங்கு எல்லாத்தையும் உடைச்சுப்போட்டுது" என்று கோபமாக கூறினார். உடனே நான் நினைத்தேன். அவன் பாடசாலையால் வந்தபின் விளையாடும்போது இந்த கண்ணாடிப்பொருட்களை தட்டி உடைத்துவிட்டானாக்கும். அதற்குதான் சித்தப்பா அவனைப்போட்டு அடித்திருக்கிறார் என்று.


ஆனால் விடயம் அது அல்ல! இங்கே நடந்ததோ வேற! அப்படியென்ன நடந்தது என்ன என்று கேட்கிறீர்களா? சுட்டி பாடசாலையிலிருந்து வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்போ வீட்டுக்கு வெளியே ஒரு வெள்ளையன். இவனும் அவனைப்பார்த்துக்கொண்டு கதவருகே வந்து நின்றுகொண்டு கதவைத்தட்ட... உள்ளேயிருந்து சித்தப்பா வந்து கதவைத்திறந்திருக்கிறார். அவன்பின்னே ஒரு வெள்ளைக்காரனும் வர சித்தப்பா சற்றுதடுமாறி நிற்க அவனும் அந்தநேரம்பார்த்து காலைவணக்கம்சொல்ல... என்னோடுதான் ஏதோ கதைக்கவாரன் என்று சித்தப்பா மீண்டும் இன்னும் கொஞ்சம் தடுமாற.... அவனும் டொச்சில்கதைக்க அது சித்தப்பாவுக்கு விளங்கவில்லை. மீண்டும் சித்தப்பா பேந்த பேந்த முழிக்க அவனும் ஹலோ நான் கதைப்பது விளங்கிறதா எனகேட்க! ... சித்தப்பா தற்போது தெளிவுடன் உள்ளே வாருங்கள் என அழைத்தார் போலும். அவனும் வந்த வேலையை ஆரம்பித்தான். ஆம் அவன் வீட்டிலிருக்கும் மின்சார தொடுப்பை பரிசோதிக்கவந்தவன்தான்.


சித்தப்பாவுக்கு தற்போது ஒருவித பதற்றம்போய் வேறுவிதமான கவலை சூழ்ந்து கொண்டது.முதலில் வந்தது தயார்படுத்தப்படாமல் எப்படி டொச் கதைப்பது என்பதான பதற்றம்.ஆனால் இப்போது இவன்கேட்கும் கேள்விக்கு எப்படி பதில் சொல்லி சமாளித்து அனுப்பபோகிறேன் என்ற பதற்றம். ஆகையால் அவன் இதை கேட்டால் இப்படி பதில் கூறவேண்டும் என தனக்குள்ளே சில கேள்விகளையும் அவற்றுக்கான விடைகளையும் தயார்படுத்திக்கொண்டிருந்தார். ஆம் சித்தப்பாவுக்கு அவ்வளவாக டொச் தெரியாது.அவன் இப்போது ஒரு கேள்விகேட்டான். அப்பாடா அதற்கு பதில் சொல்லிவிட்டார்.ஏற்கனவே மனப்பாடம் செய்த கேள்விதான்.


ஆனால் இந்தமுறை முடியவில்லை.காரணம் அது விளங்கவில்லை. மீண்டும் பேந்த பேந்த முழித்துகொண்டு அவன்கேட்கும் கேள்விக்கு போருந்தாத பதிலைசொல்லிக்கொண்டிருந்தார். கேட்டுகேட்டே சலிப்புற்ற அவன் கடைசியாக ஒருக்கா மீண்டும் கேட்டான்.இங்கதான் அந்த மிகப்பெரிய கலவரமே நடந்தது. ஆம் அதுவரை உள்ளே அறையில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலே பார்த்துக்கொண்டிருந்த சுட்டி வெளியேவந்து மேதாவித்தனமாக சொன்னான். "அவருக்கு டொச்தெரியாது நீங்க என்னிடம் கேளுங்க நான் சொல்கிறேன்" என்றதும் வெள்ளையனும் இவனிடமே கேள்விகனைகளை தொடுக்க அதற்கெல்லாம் பதில் சரியாக அழித்து அவனுக்கும் விடைகொடுத்து உள்ளே வந்தவனுக்கு சித்தப்பாவிடம் கிடைத்திருக்கிறது பூஜை. ஓட ஓட அடிபோடும்போது தட்டுப்பட்டு உடைந்தவைதான் அந்த கண்ணாடிப்பொருட்கள்.:-))


இந்த சம்பவத்தை உன்னிப்பாக கவனியுங்கள். இதில் யார் தவறு செய்தவர்? ஜெர்மன் வந்து பல வருடங்களாகியும் டொச் கற்றுக்கொள்ள முயற்சிசெய்யாத சித்தப்பாவிலா? அல்லது சுட்டியிலா? சுட்டி அங்கே அவனிடம் போய் அவருக்கு டொச் தெரியாது என்று சொன்னது தன் மானப்பிரச்சனையாக பார்க்கத்தெரிந்த சித்தப்பாவுக்கு டொச் படிக்காமல் இந்த நாட்டில் வசிக்கும்போதும் சரி ,அவனிடம் பதில்களை மாறிமாறி சொன்னபோதும் சரி அவரின் மானம் கப்பல் ஏறவில்லையா? ஏதாவது கடிதங்கள் வந்தால் அதை எடுத்துக்கொண்டு நன்கு டொச் தெரிந்த நன்பனிடமோ அல்லது மொழிபெயர்பாளரிடமோ ஓடும் இவர்களின் குடும்ப ரகசியங்கள் எப்படி பேணப்படும்? இப்படி என்னற்ற கேள்விகணைகளை அவரிடம் கேட்கலாமா என நினைத்தேன். ஆனாலும் முடியவில்லை. அதற்கு வயதும் ஓர் காரணம். அவரின் விதண்டாவாத பேச்சும் ஒரு காரணம். ஆம் நாங்க வந்த சூழலில் இங்க படிக்க வசதியில்லை.வீட்டில் இருக்கிறவங்களுக்காக உழைக்கவெளிக்கிட்டம் என்பார். :-(


(கொஞ்சம் கற்பனை)


-தர்சன்-
READ MORE - யாரில் தவறு?

குழந்தைத்தனம்

2005/10/20

ஏனோ தெரியவில்லை வழமைக்குமாறான இந்த காரியத்தை இன்று செய்ய எத்தனிக்கின்றேன். அதுவும் என் வீட்டில்.எப்போதாவது என் ரஷ்யநன்பனின் வீட்டில் செய்வது வழக்கம்தான். எனினும் என் வீட்டில் வைத்து செய்வது இதுவே முதல்தடவை. அதனால் சற்று நெருடலாகவே எனக்கு இருந்தது. நான் அதை செய்ய துடித்தாலும் என்மனதில் அப்பப்போ எதிர்மனையாக "இது உனக்கு இந்த வயதில் தேவையா?" என்று கேள்வி எழவே செய்தது. அதுமட்டுமா அப்படி ஆசையாய் இருந்தால் வழமைபோல் உன் நன்பனின் வீட்டில் வைத்து செய்யவேண்டியதுதானே. இங்கே எதற்காக செய்யத்துடிக்கிறாய் என கேள்விகேட்பதுவேறு. எனக்கென்னவோ அதில் உடன்பாடு இருந்தாலும். நன்பனிடம் சொல்லிவிட்டோமே அவன் தற்போது வீட்டிற்கு வந்துவிடுவானே, இப்போதுபோய் இல்லை வேண்டாம், பிறகு ஒரு நாள் வைத்துக்கொள்வோம் என்று எப்படி சொல்வது. என்ற தயக்கத்தினால் நானும் தயாராகவே இருந்தேன்.


ஆனாலும் என் எதிர்மனையான மனம் என்னை விடுவதாயில்லை.மூத்த பிள்ளைக்குகூட 12 வயதாகிவிட்டது. சின்னவள் ஒருத்தி கைக்குழந்தையாய் வேறு, அவர்களை அவர்களின் தாயோடு பாட்டிவீட்டிற்கு அனுப்பிவைத்த இந்த சந்தர்பத்தில் இதை செய்யத்துடிக்கிறாயா? என்ற கேள்விகள் என் ஆசைக்கு எதிராக எழுந்தவண்ணமே இருந்தது. ஆனாலும் இப்படியான ஒரு சந்தர்பத்துக்காககத்தானே காத்திருந்தேன். நான் இதை இப்போது செய்யாமல் என்னவள் முன்னும் என் குழந்தைகள் முன்னுமா செய்ய முடியும்? அவர்கள் என்னை நக்கலடிக்கமாட்டார்களா? இதனால் எவ்வளவு பணத்தை நான் இழந்திருப்பேன். அல்லது பெற்றிருப்பேன். அதுவெல்லாம் இருக்கட்டும் அதில் எனக்கு எவ்வளவு விருப்பம் தெரியுமா? அதையெல்லாம் விட முடியாது. இது இன்றா நேற்றா என் ஜந்து வயதிலிருந்து செய்து வந்ததாயிற்றே. என்ன திருமணத்திற்குப்பிறகு எப்பவாவது ரஷ்யநன்பனின் வீட்டில் செய்வது வழக்கம். ஆனாலும் இப்போ கிட்டத்தட்ட ஒரு நான்கு ஜந்து வருடங்களாக தொடவில்லை. நேற்று என் நன்பனை மீண்டும் கண்டபோது இருவரும் பேசி இன்று என் வீட்டில் செய்வதாக முடிவெடுத்தோம். இதில் என்ன தவறிருக்கிறது. இதுதான் சந்தர்ப்பம். விட்டுவிடாதே நிரோஜன் விட்டுவிடாதே என திடமாக என் மனம் குறிவிட்டது.


என் மகன் இதை செய்யும்போது என்கைகள் துடித்தும் எத்தனை தடவை என்னைக்கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். அதற்கெல்லாம் காரணம் இந்தப்பாழாய்போன குடும்பத்தலைவன் பெறுப்புத்தான். எனக்கு எல்லாம் எவன் திருமணம் செய்து வைத்தது? அது சரி யார் செய்து வைத்தார். நானாய் என் பதினேட்டாவது வயதில் தேடிக்கொண்டதுதானே.அம்மா அப்பாவோடு எத்தனை சண்டைகள் இதற்காய். ம்...... அதுவும் ஒருகாலம். ஒருவேளை செய்யவேண்டிய வயதில் செய்யாமல் விட்டதால்தான் இப்போது செய்யத்துடிக்கிறேனா? ச்சீ..... அப்படியென்றுமில்லை நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். என நினைக்கிறேன்.


ஆகா! வந்துவிட்டான் அழைப்புமணியை அழுத்துவது அவன்தான். ஆவலுடன் ஓடிசென்று கதவைத்திறந்தேன். அவனேதான். தன் கைகளைநீட்டிய வண்ணமே ஹாய் சொன்னான். நானும் கைகளை கொடுத்து அவனை உள்ளே அழைத்து வரவேற்பேறையில் உட்காரவைத்தேன். அவன் "தொடங்குவமா?"என ஆவலாய்க்கேட்டான். நானும் என்ஆவலை வெளிக்காட்டிய வண்ணம் அவன் கைகளைப்பார்த்தேன். ஆகா !!!! ஆகா !!!! எத்தனை சிடிகள். கிட்டத்தட்ட ஆறு ஏழு இருக்கும். ம்... இரு வாறேன் என்று சொல்லிக்கொண்டே ஆவலாய் என் மகனின் அறைக்கு வேகமாகநடந்தேன். அவன் படுக்கைக்கு கீழே அந்தப்பெட்டி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவனருகே வந்து "எவ்வளவு காசு வைப்போம்?" என கேட்டேன். அவனும் 10யூரோ என்றான். சரி என்றவாறே தொலைக்காட்சிப்பெட்டியைபோட்டு அதிலே அந்தபெட்டியிலிருந்து எடுத்த PlayStation பெட்டியை இணைத்து,அவன் கொண்டுவந்த சிடியிலே எங்களுக்குபிடித்த விளையாட்டை போட்டு விளையாட தொடங்கினோம். எத்தனை ஆண்டுகள் விளையாடவிட்டால் என்ன !!! என் கைகள் துள்ளிக்குதித்துக்கொண்டு உதைபந்தாட்டம் விளையாடியது.


- தர்சன்-
READ MORE - குழந்தைத்தனம்

நான் தூங்கிவிட்டேன்

2005/08/21


ன்று ஞாயிற்றுக்கிழமை தற்போது 16:32 மணி நான் தூங்கிவிட்டேன்.


என் 24 வயதில் என் தாய் நாட்டை மட்டுமல்ல. என் தாயையும் என் சகோதரிகளையும் விட்டு கண்ணீரோடு பிரிந்த வலி இன்றும் என் மனதில் மாறா வடுக்களாய். எத்தகைய ஒரு துன்பமது. எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் சரி என் தாய் முகம் கண்டால் அவை அடுத்த நிமிடம் இல்லாமல் போகும் மாயம் தான் என்னவோ? என் தோழிகளாய் இரண்டு தங்கைகள். இறைவன்தந்த அற்புதமான தோழிகள் அவர்கள். அப்பாவின் பிரிவின்போது நான் அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் அவர்கள் அன்று ஆறுதல் கூறிவழியனுப்பினார்கள். அழுகைவந்தாலும் அடக்கிக்கொண்டு என்னை நம்பி உள்ளவர்கள் அழகூடாது என்பதற்காய் வைராக்கியமாக விமானம் ஏறினேன்.


அன்னையில்லா தங்கையில்லா நாட்டில் எப்படி வாழ்வது? அவர்கள் முகங்கள் எங்கே? சத்தியமாக சத்தம்போட்டே அழுதுவிட்டேன். மிகப்பெரியசத்தம்கூட வெளியே போகமுடியாத அடைபட்ட அறைக்குள் இருந்து அழுதேன். அறை மட்டுமல்ல என் வாழ்க்கையும் அப்படித்தான் உணர்ந்தேன் முதலில்.


வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நம்பிக்கை வரதொடங்கிவிட்டது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனைய தமிழர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் ஒரிரு நன்பர்களை பெற்றுவிட்டேன். அதுமட்டுமா! என் இரண்டு தங்கைகளுக்கும் ஒருவழியாக திருமணம் முடித்து வைத்துவிட்டேன். அய்யோ எனக்கு சந்தோசமாக இருக்கிறது. அம்மாவும் தங்கைகளும் எனக்காய் ஒரு பெண்பார்த்திருக்கிறார்கள். ஆம் எனக்கு திருமணம். என்னை புரிந்துகொள்ள, நான் இந் நாட்டிலே பட்ட துன்பங்களை சொல்லி அவள் மடியில் விழுந்து அழ மீண்டும் ஒரு தோழி கிடைக்கப்போகிறாள். என்னை புரிந்து கொண்ட ஒருத்தி....


திருமணம் ஆகிய புதிதில் என்னவளில் கண்ட மகிழ்ச்சியை தற்போது காணமுடியவில்லையே! என்ன காரணம்? புரியவில்லை பழ நாட்களாய்........ புரிந்து கொண்டேன் ஒரு நாள். அவள் தன் தோழியிடம் போனில் பேசும்போது. நான் பார்க்கும் கூலி வேலை அவளுக்கு பிடிக்கவில்லையாம்.எனக்கு மொழி தெரியாதாம். எனக்கு தலையில் முடியில்லையாம். நான் அவளைவிட சற்று குள்ளமாம்.நாகரிகமாக உடையுடுத்த தெரியாதாம். அதனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம்.


அட அட என்னில்தான் தப்பு. அவளின் ஆசைகளை புரிந்து கொள்ள தெரியவில்லை. அவளுக்கு பிடித்த மாதிரி உடையணிந்து அவளுக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டிசென்றிருக்கவேண்டும். அவளின் குறைகளை வேறு விதத்திலாவது பூர்த்தி செய்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு நாள் அதையும் செயற்படுத்திப்பார்த்தேன்.


எனக்கு பிடிக்கவில்லை இந்த உடை. என்ன இது நிம்மதியாக நடக்ககூட முடியவில்லை. அவ்வளவு இறுக்கமான உடை. ஆனால் அவள் முகத்தில் ஏதோ ஒரு சிறிய சந்தோசம். பொருத்துக்கொண்டேன்.
ஜயோ என் ஆசைப்படி எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் பிறந்தார்கள்.... நான் சந்தோசமாக இருக்கிறேன்.



சில நாட்களில் மீண்டும் அவள் முகம் வாடி இருந்தது.இந்த முறை எனக்கு அவளுக்காய் இறங்கிப்போக மனமில்லை. வேண்டும் என்றால் அவள் இறங்கிவரட்டும் என்ற இறுமாப்போடு இருந்துவிட்டேன். ஆனால் அவள் இறங்கவுமில்லை இரங்கவுமில்லை. மீண்டும் நான் அவளின் குறை எதுவேன அறிய ஆவலாய்.


அவளுக்கும் அதுவே பழகிப்போய்விட்டது. விட்டுக்கொடுப்புக்கள் எல்லாம் நான்தான் செய்தேன். அதை அனுபவிப்பது மட்டுமே அவள்வேலை. என் வாழ்க்கையின் வேதனை தொடர்ந்தது. அவளுக்கு வர வர இந்த உலகில் என்னைத்தவிர எல்லாமே பிடித்திருந்தது. அயலவர்களிடம் கூட என்னை மிக மட்டம்தட்டி கதைப்பது அவளுக்கு பிடித்த செயலாக மாறிவிட்டது. நான் நன்பராக நினைத்த நன்பர்கள் கூட எங்கள் வீட்டுக்கதையை வீதிகளில் கூறித்திரிந்தார்கள்.அதற்கு காரணகர்த்தா என்னவளே! வாழ்க்கையே வேறுத்துவிட்டது.


நான் அவளிடம் எத்தனையோ தடவை கூறிவிட்டேன். அவள் என்கதையை கணக்கிலேடுப்பதேயில்லை.ஆனாலும் நான் மனம்தளரவில்லை. பொறடி பொறு என் பிள்ளைகளை வைத்தே உன்னை என் வழிக்கு கொண்டு வருகிறேன் பார். என்ற இறுமாப்போடு வாழ்ந்துவந்தேன். எனினும் என் மனம் ஏனோ சில நாட்கள் என்னையே நொந்துகொள்ளும். இது என்ன வாழ்க்கை... ச்சீ......


என் நம்பிக்கையே என் பிள்ளைகள்தான். ஆனால் அவர்களும் என்னை புரிந்து கொள்வார்கள்போல் தெரியவில்லை. அவர்கள் தாய் செய்வதே சரி என்று ஓம் போடுகிறார்களே. ஓ.... இப்பதானே அவர்களுக்கு பதின்ஜந்து வயது. சிறுவர்கள்தானே.என நினைத்து மனதைத்தேற்றிக்கொண்டேன். என்செல்வங்களா! நீங்களும் என்னை புரிந்து கொள்ளாவிடில் என் வாழ்கைக்கே அர்த்தமில்லாமல்போய்விடும். தயவுசெய்து என்னை புரிந்து கொள்ளுங்கள். Please


இல்லை அவர்களும் தாய்மாதிரித்தான். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. என் கதையை காதில்கூட விலுத்துவதில்லை.இப்போ நான் ஏனோ தெரியவில்லை. சில நேரங்களில் தனிமையில் கதைக்கிறேன். எனக்கு என்ன நடந்தது? என்னுடன் வீட்டிலும் கதைக்க ஒருவரும் தயாரில்லை. வெளியிலும் ஒருவரும் தயாரில்லை. ஏன் ?


என் மகள்மாருக்கு 19 வயதாகிவிட்டதாம். என்னும் தாயகத்திலிருக்கும் அவர்களின் பாட்டியை பார்த்ததில்லையாம். இந்த வருடம் இலங்கை போறதாம். ஜயோ மீண்டும் எனக்கு தலைகால் புரியாத சந்தோசம். எங்கட அம்மாவையும் தங்கைகளையும் பார்க்க போகபோகிறோம்.அம்மா மடியில் கிடந்து நடந்ததையேல்லாம் சொல்லி அழவேண்டும். என்ற எதிர்பார்ப்பு. இல்லை வேண்டாம், என் துன்பம் என்னோடே போகட்டும். ஜயோ நான் இப்ப சந்தோசமாக இருக்கிறேன்.


என்ன இது நடக்கிறது!. ஏன் நான் இங்கே நிற்கவேண்டும். நீங்கள் மட்டும் தாயகம் போகபோகிறீர்களா? நான் என்ன இலிச்சவாயனா? எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அன்று வளமைக்குமாறாக காரசாரமான சண்டை நடந்தது. முடிவு வளமைபோல்தான். அவள் வெற்றி. நான் தோல்வி. எனக்கு தற்போது வேலையில்லையாம்.ஆகலும் கடைசி இரண்டு மாதங்களாகதான் நான் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறேன். என் விசாவுக்கு இலங்கை போகமுடியாதாம். இன்னும் எவ்வளவுகாலம் ? விசாமாற்றி எடுக்க எனக்கு நல்லா மொழி தெரியாதாம். இது என் அருமை புதல்விகள் சொன்னது. எப்படியோ என்னை கூட்டிசெல்ல அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவள் சொன்னாள் நான் செய்த வேலையை அங்கே போய் செல்லமுடியாதாம். அது ரொம்ப கேவலமாம். ம்........... அவர்களுக்கு இவ்வளவு காலம் சோறு போட்டதே அந்த வேலைதான்.

இப்ப பாருங்கள் என்னை இங்கே விட்டுவிட்டு அவர்கள் எல்லோரும் தாயகம் போய்விட்டார்கள். நான் தனிமையில்.... எனக்குள் ஒரு வெறுமை நீண்ட காலத்தின் பின் மீண்டும். என்னவோ என்வாழ்க்கையே வீண். வாழ்வதிலும் பார்க்க சாகலாம் போலயிருக்கு.


"என்ன நீ முட்டாளா? நீ எதற்காக சாகவேண்டும். இதை எல்லாம் விட்டுத்தள்ளு. ஏன் வாழ்க்கையில் இன்பமில்லை என்கிறாய்? யார் இவர்கள். உன்னை அடைத்து வைக்க. நீ வாழ்ந்த பழைய வாழ்க்கையை மறந்துவிட்டாயா? உனக்காக அங்கே பாசத்தை அள்ளித்தர தாய் தங்கைகள் இல்லையா? கணவனை மதிக்கதெரியாதவளுக்காகவும் தந்தையாக பார்க்காத புதல்விகளுக்காக நீ எதற்காக அழவேண்டும். வாழ்க்கையை வெறுக்கவேண்டும். எல்லோரையும் தூக்கி எறி. உன் தாய் நாடு செல். தாய் மடி படுத்து கதறி அழு, ஒரு புதிய வாழ்க்கையை வாழுவாயா அதை விட்டுவிட்டு இது என்ன மோட்டுத்தனம்." என்று ஆறுதல் சொல்லும் உங்களுக்கு என் நன்றி. எனினும்.............


இன்று ஞாயிற்றுகிழமை தற்போது 16:32 மணி நான் தூங்கிவிட்டேன், நிரந்தரமாக தூங்கிவிட்டேன். ஆம் தூக்கில் தொங்கிவிட்டேன்.




(சில சம்பவங்கள் தரும் தாக்கத்தால்)

-தர்சன்-
READ MORE - நான் தூங்கிவிட்டேன்

வேடிக்கையான தமிழர்கள்

2005/07/28

புலம்பெயர் நாடுகளில் நம் தமிழர்களிடம் என்ன இருக்கோ இல்லையோ கடன் நிச்சயமாக இருக்கும். இதற்கு காரணம் சொல்ல வேண்டும் என்றால் தலையே வெடித்துவிடும். காசு நிறைய இருந்தாலும் நான்குபேரிடம் கடன் வாங்கிவைத்துக்கொள்வான். காரணம் தன்னை மற்றவர்கள் பணக்காரன் என்று கூறிவிடக்கூடாது என்பதற்காக. வாங்கிய ரீசேட் நாளைக்கே கிழிந்துவிடுகிறேன்பார் என்ற நிலையில் இருக்க அதோடே வேலைக்குப்போய் வருவான் ஒருவன். எங்களிடம் பணம் இல்லை என்று மற்றவர்களை ஏமாற்றவே இந்த நடிப்பு. அரசின் எல்லாவிதமான இலவச சலுகைகளையும் நுகரும் இவர்களின் பணவைப்பகம் அவர்களின் கட்டில்களுக்கே வெளிச்சம். :-) பல தமிழர்களை ஏமாற்றினாலும் தம் வேண்டப்பட்டவர்கள் மூலம் இவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிவரும் சேவை மிகப்பெரியது. அது வேறு ஒன்றுமில்லை வட்டிக்கு காசு கொடுப்பதுதான்.


இவர்கள் ஒருபுறமிருக்க மற்றவர்கள்........


இவர்கள்போட்டால் "நைக்" மார்க் சப்பாத்துகளைத்தான் போடுவார்கள். மற்றவர்களுடன் கதைக்கும்போது தனக்கு "வருமை" என்றசொல்லே தமிழில் இருப்பது தெரியாததுபோல கூறிக்கொள்வார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் இலட்சக்கணக்கில் கடன் இருக்கும். அவர்கள் வாழ்க்கைமுழுவதும் உழைத்தாலும் அக்கடனை அவர்களால் அடைக்கமுடியாது. இது அவர்களின் நிலை. ஆனால் வீட்டில் ஒரு விசேடம் என்று வந்தால் அவர்களைக்கேட்டுத்தான் ஆடம்பர செலவுக்கு. இல்லை இல்லை அவர்களைப்பொருத்தவரை அத்தியாவசியம். இப்படியிருக்கின்றது இவர்கள் வாழ்க்கை. புலம்பெயர் நாடுகளில் திட்டமிட்டு வாழத்தெரிந்தவர்கள் வெகுசிலரே. நான் இவர்களை குற்றம் சாட்டவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும், வெள்ளையர்களைப்போல் நாங்கள் இந்த நாடுகளில் வாழ்வது மிகக்கடினம்.(வாழமுடியாது என்று இல்லை) அவர்களின் உழைப்புக்கள் அவர்களுக்கு மட்டுமே உரித்தான கலாச்சார பின்னனி அவர்களது. ஆனால் எமது அப்படியானது அல்ல. அதற்காக நான் முதலில் சொன்னதுபோல தன்னை ஏழையாக மற்றவர்களிடம் காட்டி பணம்சேர்பது விரும்பப்படக்கூடிய செயல் அல்ல. திட்டமிட்டு வாழ்ந்தால் அவ்வாழ்க்கை உத்தமம்.
READ MORE - வேடிக்கையான தமிழர்கள்

பேய் பொழுதுபோக்கு

2005/07/24

எல்லோருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்குகள் இருக்கின்றன. அவை சில வித்தியாசமான அனுபவத்தை தரும். என் தங்கையின் கணனியை திறந்தால் அங்கே பழைய நடிகர் நடிகைகள் முதல் தற்கால நடிகர் நடிகைகள் வரை மட்டுமல்லாமல் நான் எங்கள் வீட்டிலிருக்கும் அனைவரும் Microsoft paint மூலம் வடிவடைக்கப்பட்ட பேய்களாகவே இருக்கிறோம். நம்மள சும்மா பார்த்தாலே பேய் மாதிரி இருக்கும் என்பதால் இங்கே வேறு ஒரு போட்டோ காட்சிக்காக....





{ எங்களின் வீட்டில் உள்ள எல்லா தனிப்போட்டோக்களும் மாற்றிமுடிந்ததால். தங்களுடைய போட்டோக்களையும் வேண்டிநிற்கிறார் என் அருமைத்தங்கை :-)) }
READ MORE - பேய் பொழுதுபோக்கு

புகைப்படம்

2005/07/14

நிறைய நாட்களாக ஒன்றுமே பதியவில்லை. என்று இன்று நினைத்தேன். அதற்காகத்தான் இந்தப் பதிவு. அண்மையில் கிடைத்த விடுமுறையில் பக்கத்திலிருக்கும் கில்லஸ்பேர்க் மேசேயுக்கு ஒரு பயணம் போய் பார்த்து போதுதான் அங்கே அழகான காட்சிகள் தென்பட்டன. அதை நான் வைத்திருக்கும் ஒரு டியிட்டல் கமராவால் கஸ்டப்பட்டு விதவிதமான கோணத்தில் படமெடுப்பம் எண்டு நினைத்து. விழுந்து விழுந்து எடுத்துட்டு வீட்டகொண்டுவந்து போட்டுப்பாத்தா எனக்கே திருப்தியில்லை .எனினும் என்ன செய்ய கஸ்டப்பட்டு எடுத்தது வேஸ்டாப்போகக்கூடாது என்பதற்காக சில தெரிந்தேடுத்த படங்கள் இங்கே.


Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us
Free Image Hosting at www.ImageShack.us

கிடைக்கும் புகைப்படங்களை வைத்து ஒரு அலட்டல் :- http://piriyan.busythumbs.com/
READ MORE - புகைப்படம்

ஒரு செய்தி

2005/05/21

அண்மையில் யேர்மனியின் தலைநகராம் Berlin இல் ஒரு நினைவுமையம் திறந்துவைக்கப்பட்டது. 60 வருடங்களுக்கு முன் யேர்மனியின் நாசிப்படைகளால் கொல்லப்பட்ட யூத மக்களின் ஞாபகார்த்தமாக இவ்நினைவுமையம் திறக்கப்பட்டது. இந்த நினைவுமையத்தை திறக்கவே தற்போதைய அரசு எவ்வளவோ பாடுபடவேண்டியிருந்தது என்பது உலகமறிந்த உண்மை. ஒரு வழியாக திறக்கப்பட்ட இந்த நினைவுமையத்தை பார்வையிட வந்த இஸ்ரேலிய அமைச்சர் தனக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரிகிறது.அதாவது யேர்மனியில் குறிப்பாக 24 வயதுக்கு கீழ்ப்பட்ட இளையர்களுக்கு யேர்மன் நாசிப்படைகளால் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டதே தெரியாது என்று தகவலை யேர்மன் நாட்டுபத்திகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நம் இருநாட்டின் உறவும் எதிர்காலத்தில் கேள்விக்குறியாய் உள்ளதாய் கூறினார். கூறிவிட்டு அவரும்போய்விட்டார்.




இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் யேர்மனியின் பிரபல தொலைக்காட்சியான ARD ஒரு செய்தி தொகுப்பை வெளியிட்டது. அதில் அந்த நினைவுமையத்தில் சிறுபிள்ளைகளும் , கதல்ஜோடிகளும் தங்கள் தங்கள் கைவரிசையைக்காட்டிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் அவ்நினைவுத்தூபிகள் மீது ஏறி அங்கும் இங்கும்மாக பாய்ந்து விளையாடியும், காதல் ஜேடிகள் நினைவுத்தூபிக்கு இடையிலிருந்து தங்களின் காதலை பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ARDயின் நிருபர் ஒரு பிள்ளையின் தாயிடம்போய்க்கேட்டார். "ஏன் அதற்குமேல் தங்களின் பிள்ளையை விளையாட விட்டிருக்கிறீர்கள்" என்று. அதற்கு அந்ததாய் கூறியது நானும் என் மகனும் இந்தவழியாகவந்ததாகவும் அப்போத பலபிள்ளைகள் அதில் ஏறிவிளையாடியதைப்பார்த்த தன்மகனும் ஆசைப்பட்டதால் தான் அனுமதித்ததாகவும் வெகு சாதரனமாக கூறினார்.


அதற்கு ARDயின் நிருபர் "இது ஒரு நினைவுத்தூபி" என்றதும். "அப்படியா! நான் இப்ப என்ன செய்யவேண்டும்" என அப்பாவிபோல கேட்டார். இதைப்போலவே பெரும்பாலானவர்களுக்கு அது என்ன என்றேதெரியாதவர்களாக இருந்தார்கள். ஒரு சிலரே "ஒம் எங்களுக்குக தெரியும்".என்று கூறியிருந்தனர். என்னவே நல்லகாலம் இதை அந்த இஸ்ரேலிய அமைச்சர் பார்க்கவில்லை பார்த்திருந்தால் அவர் அங்கேயே மண்டையை போட்டிருப்பார். இது யேர்மனியின் நிலைமட்டுமல்ல. நான் சிலகாலங்களுக்கு முன் கண்னுற்றேன் என் தாய்திருநாட்டில்கூட இதே நிலைதான். கல்லறைகளுக்குபின் காதல்ஜோடிகள். அதுசரி அவர்களும் அமைதியாக காதல் செய்ய அங்கு இடமில்லைதான். அதற்காக புனிதசின்னங்களா இடம். இனியாவது நல்ல தலைவர்கள் வந்து காதலர்களுக்கும் காதலிக்க நல்ல இடம் கட்டிக்கொடுக்கவேண்டுமென கடவுளைப் பிரார்த்திக்கிறேன். :-))

READ MORE - ஒரு செய்தி

இன்றுதான் எனக்கு விடுதலை

2005/02/01


வணக்கம், நான் என் சூழழுடன் நடத்தும் பேராட்டத்தில் நான் கண்டவற்றை எழுதவேண்டும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்.



அப்பாடா இன்றுதான் எனக்கு விடுதலை..... சொட்டைத்தலையன் சிம்மர்மானிடமிருந்து... ஆனால் மீண்டும் திங்கட்கிழமை அதே மோட்டத்தலையன்தான். உம்......... என்ன செய்வது கட்டாயமாக தொழிற்கல்விபடித்துமுடிக்கவேண்டும்.இன்னும் இரண்டு வருடங்கள் இதே தொல்லைதான். ஆனால் இன்று ஒரு சிறிய சந்தோசமான நாள். காரணம் வெள்ளிக்கிழமை. இரண்டுநாட்கள் எனக்கே எனக்கானநாள். சரி... இன்று இரவு என்ன செய்வது. என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஞாபகத்தில் வந்தவன் என் ஒன்றைவிட்ட மாமன். அவன் என்னமாமன் என்னிலும்பார்க்க ஒரு வயது கூடியவன். முறைப்படிதான் மாமன். ஆனால் எனக்கு அவன் நல்ல நன்பன். அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.


"அம்மா நான் இன்டைக்கு நடராஜன் ரூமில போய்தங்கப்போறேன். அவன் தன்னுடன் வந்துதங்கேன் என்று கேட்டான். போகட்டா?" என்றுகேட்டேன். அம்மா சற்றும் யோசிக்காமல் "சரிபோயிட்டு வா" என்றாள் நடராஜன் மேலுள்ள நம்பிக்கையால். என்கல்லவா தெரியும் அவன் பசுந்தோல் போற்றிய புலி என்பது. போத்தல் போத்தலாக குடித்துவிட்டு ஒரு சுவிங்கத்தை சப்பியவாறே எங்க அப்பாவுக்கு சல்யூட் அடிப்பான். அப்படிப்பட்ட பச்சைக்கள்ளன். எனினும் அவன் செய்யும் குறும்புகள் அவனைமட்டுமே பாதிக்கும். மற்றவர்களை பாதிக்காது. அதனால்தான் அவன் வண்டவாளங்கள் வெளிவராமலிருக்கின்றன. "சரி அம்மா நான் போயிட்டு நாளைக்கு வாரன்." என்று கூறியவாறே என்தோள் பைக்குள் சில உடைகளை மடித்துவைத்துக்கொண்டு புறப்பட்டேன் நடராஜன் ரூமைநோக்கி. நடராஜனின் ரூம் எங்களின் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளித்தான் இருக்கிறது.


அவன் குடுக்கும் முன்னுறு யூரோவுக்கு இந்த நகரத்தில் இப்படிப்பட்ட சிறிய ரூமைத்தவிர வேற ஏதுவும் கிடைக்காதுதான். அச்சிறிய அறையினுள் அப்பாடா எத்தனை பொருட்கள். கண்களுக்கு அது ஒரு சிறிய களஞ்சிய அறைபோல் தோற்றமளிக்கும். ஒரே ஒரு மூலையில் அவன் தூங்குவதற்கான கட்டில் இருக்கிறது. அவ்விடம்மட்டுமே சற்று பிரகாசமாக காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு ரூமில் அவன் எப்படித்தங்குகிறான். அதுசரி அவன் எப்போது அங்கே தங்கினான். வருடத்தில் முன்னூறு நாட்கள் நன்பர்களின் வீடுகளிலேயே படுத்துத்தூங்கிவிடுவான். பகலில் வீட்டுப்பக்கமே வருவதில்லை. எப்போதாவது வந்து தூங்கவும் கடிதங்களின் வருகைக்கான முகவரிக்கும்தான் அந்த ரூம். எங்கள் வீட்டிற்கு வா என்றால் "முடியாது" என்று ஒருவார்த்தைதான். அவனுக்குத் தெரியும் எங்களின் வீட்டிற்கு வந்தால் அவன் நினைத்த நேரம் வெளியே செல்ல முடியாது. அதுமட்டுமல்ல அவனின் சுகந்திரமான ஏனைய செயற்பாடுகளும் தடைப்படும் என்பது. அவன் புத்திசாலி...


ரூம் கதவை திறந்து உள்ளே சென்றேன். என்னைக்கண்டவுடன் "வாடா வா கொம்மா கொப்பா என்னவாம்?" என்று அன்போடு கேட்பது போல் கேட்டாலும் எனக்கு தெரியும் அது வம்புக்கேள்வி என்பது. அதனால் "ம்...... சுகமாயிருக்கினம். நீ ?" "ம்... ஏதோ உயிரோடு இருக்கிறன்." என்று பதில் வந்தது. அதைத்தொடர்ந்து ஊரிலுள்ளதன் அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்தது தொடக்கம் இங்கேயுள்ள உறவினர்கள்வரை எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லியே என்னை அறுத்துவிட்டான். "நில்லடா இப்ப என் ப்ரண்டெல்லாம் வருவாங்க வந்தவுடன் நாங்க போவம்" என்றான். அப்பாடா இப்பவாவதும் அதைப்பற்றிசொன்னானே என்று பெருமூச்சு வெளியேரியது. அவனுக்கென்னவோ இது அடிக்கடி செல்லுமிடம்தான். அனால் நான் எப்போதாவது தான் செல்வேன். "டேய் சாப்பிட்டியா?" "இல்லை" "நீ?" "இல்லை போகும்போது கடையில சாப்பிடுவம் சரியா?" "சரி" "ஆனால் நீதான் காசு குடுக்கனும்." ஆகா.... முறையாக மாட்டுப்பட்டுவிட்டேனே. இன்று இவனும் இவன் ப்ரண்டுகளும் சேர்ந்து என்னை உருட்டியேடுக்கப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது அவனின் தொடர்ந்த கதையிலிருந்து. எனினும் என்ன செய்ய... தொழிற்கல்விபடிக்கும் போது தரும் பணம் இதற்கு பயன்படுத்தாமல் வேறு எதற்கு. "சரி" என்றேன்.


அழைப்புமணி ஒலித்தது...... கதவை நான்தான் திறந்தேன். நட்சின் ப்ரண்டுகள். ஆம் நடராஜன்தான் நட்ஸ். பெயரை வெள்ளையர்கள் கூப்பிடுவதற்காக அப்படி சுருக்கிவிட்டான். இல்லை நறுக்கிவிட்டான். ஆனால் தற்போது வெள்ளையர்கள் இவனை நா..டா...ரா..ஜன் என்றுதான் கூப்பிடுகிறார்கள். அப்போ இந்த நட்சை... கூப்பிடுவது வந்திருக்கும் அவன் நன்பர்களும். சிலவேளைகளில் நானும்தான். "வாங்கடா வாங்க" நட்ஸ்குரல்தான். "வாங்கடா" நானும் என்பங்குக்கு கூப்பிட்டேன். அந்த சின்ன அறைக்குள்ளே நான் அதுவரைபாத்திறாத இரண்டு மிருகங்கள் நுழைந்தது. ஆம் அவர்கள் போதுநிறமுமல்ல அதிலும் சற்றுகுறைவுதான் ஆனால் அவர்கள் தங்களின் தலைக்கு பழுப்புநிற டை அடித்தது மட்டுமல்லாமல் காதுகளில் கடுக்கன் வேறுகுற்றியிருந்தார்கள். சகிக்கமுடியவில்லை. "என்னடா சயீ நீயும் இன்டைக்கு எங்ககூட வாரியா" கேட்டான் அந்த குண்டன். "ஓம் ஏண்டா" "இல்ல சும்மாதான் கேட்டேன்" என்றான் மீண்டும் குண்டன். இதற்கிடையில் முந்திரிகொட்டை நட்ஸ் "அவன்தான் இன்டைக்கு எங்களுக்கு எல்லாம் செலவு செய்யப்போகிறான்" என்று கூறி "வாங்கடா இறங்குவம்" என்றான்.


உள்ளே நுழைந்தோம். கண்ணைப்பறிக்கும் கலர் கலர் விளக்குகள் அந்தரத்தில் தொங்கியவாரே காட்சியளித்தது. சென்றமுறை சென்றபோதுகூட சற்று இருண்ட நிலையில் காட்சியளித்த இந்த டைமன் டிஸ்கோ இந்த முறை சற்றுபிரகாசிக்கவே செய்தது. ஓ.... ஒருவேளை கிறிஸ்மஸ் கொண்டாட்டம் காரணமாக மேலதிகமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்களாம். அது சரி இங்கே வந்துவிட்டோம். இப்போ வெளிச்சமா அல்லது இருளா முக்கியம். வந்த காரியத்தை கவனிப்போம். திரும்பிபார்த்தேன்... நட்ஸ்சை காணவில்லை. இவங்கள் எங்கே? ம்..... காணவில்லை சுற்றி சுற்றி பார்த்தேன். "டேய்" அதே குரல்.
திரும்பிப்பார்த்தேன். " எங்கடா போனனி?" அப்பாடியோ குண்டன் வாய்குள் அக்கேள்வி மட்டுமல்ல குடிவகை நாற்றமும் சேர்ந்தே வந்தது. "நான் இங்க பார்த்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாவிகளா விட்டுவிட்டுபோயிட்டிங்கள். மற்றவங்கள் எல்லாம் எங்கே?" இப்போ குண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. தொடர்ந்து நடந்தான் அந்த சதுரவடிவான மதுஅருந்தும் இடத்திற்கு. அங்கே ஏற்கனவே ஒரு ரவுண்டில் இருந்தான் நட்ஸ்சும் அவன் ப்ரண்டும். ம்... எனக்காகவும் ஒரு பெரிய அளவிலான கிளாஸ்சில் பியர் காத்திருந்தது. "வாடா வா.... எடுத்தடி" இது நட்ஸ். நான் மட்டும் என்ன சின்னப்பையனா! சென்றமுறை வந்தபோது மூன்று கிளாஸ் பியர் குடித்தேன். இந்தமுறையும் அத்தனை முடியாவிடினும் ஒன்றாவது இறங்காதா என்ன? ஆனால் முடியவில்லை. ஒன்றே இயலாமலிருந்தது. ஆனால் நட்ஸ்சும் அவன் பிரண்டுகளும் இரண்டாவதை நிறைவுசெய்தார்கள். அவர்களின் பழிப்புக்கு ஆலாகமல் இருக்கு வேண்டுமல்லவா அதனாலே நான் என் முதல் கிளாஸ் பியரை ஒருமாதிரியாக நிறைவுசெய்தேன்.


"எனக்குப்போதும் வாங்க மற்றவேலையப்பாப்போம்." "என்னடா ஒன்டுபோதுமா?" என்றான் நட்ஸ். ஓம் ஓம் போதும். வாங்க வாங்க என்று கூறியவாரே அந்த Usher பாடலுக்கு ஆடியவாரே நான் அந்த ஜோதியில் ஜக்கியமானேன். இசையின் வேகம் அதிகரித்தது. என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டை மீறி ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தது. அந்தநேரம்தான் அக்குரல் "அம்மாமாமா..... " என்று கேட்க திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். குண்டன்தான்..ஆனால் குண்டனைஇப்ப குனியவைத்து குத்திக்கொண்டிருந்தார்கள் நான்கு வெள்ளையர்கள். காரணம் புரியவில்லை நட்ஸே தன் கொசு உடம்பைவைத்துக்கொண்டு திணரிக்கொண்டிருந்தான் ஒரு வெள்ளையனின் கைப்பிடியில். மற்றவனைக்காணவேயில்லை. ஓ....... அவன் இப்போது கீழிருந்து எழுகின்றான். ஓரே கூச்சல்... நான் இப்போது அருகேவந்துவிட்டேன். "ஆ......." ஆம் என்னையும் மற்றவர்களையும் அந்த டிஸ்கோவில் வேலைசெய்யும் பாதுகாவலர்கள் கைகளை மடக்கிப்பிடித்துக்கொண்டு தர தரவென வெளியே இழுத்துவந்தார்கள். அந்நேரம் நட்ஸ்சுக்கு ஒரு அடியும் விழுந்தது. அந்த எருமைமாடுமாதிரியிருந்த பாதுகாவலன் பிடித்ததில் என்கைகள் சரியாக வலித்தது.


வந்துவிட்டார்கள்... இவர்களைதான் நாங்கள் செல்லமாக மாமா என்றழைப்போம். இவர்களிடம் அந்தபாதுகாவலர்கள் எங்களை ஒப்படைத்தார்கள். கேட்டான் என்னிடம் "எங்கே உனது கடவுச்சீட்டு?" எடுத்து கொடுத்தேன். ஒருமுறை ஏற இறங்கபாத்துவிட்டு ம் என்றான். " இங்கே என்ன செய்கிறாய்?" "தொழிற்கல்வி படித்துகொண்டிருக்கிறேன்." "எங்கே?" அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத்தொடுத்தான்.
"இங்கே இரு" என்று உரத்த கூரலில் கூறிவிட்டு சற்று தள்ளிச்சென்றான். இப்போது நான் நட்ஸ்சைப்பார்த்தேன். ஒரு புன்சிரிப்பு... அதற்கு அர்த்தம் எனக்குத்தெரியும். பாரடா நீல பாஸ்போட்காரன் எனக்கும் டொச்சப்பாஸ் வைத்திருக்கும் உனக்கும் ஒரேமரியாதைதான் எனநினைத்துத்தான் அந்தப் புன்சிரிப்பு. "ம்" அவனும் அவன் பிரண்டுகளும் சரியாக எரிந்தது எனக்கு. குண்டன்பாவம் நல்ல அடிவாங்கியதால் இப்போதுதான் அவனை வாகனத்தில் ஏற்றிகொண்டு வைத்தியசாலைக்கு போயிருந்தார்கள். அவனைநினைக்க எனக்கு கவலைவரவேயில்லை இப்போ என்கவலையேல்லாம் நாளை வீட்டிற்கு பொலிஸ் வரப்போகிறதே என்பதுதான்.


இரவு " நானும் நட்ஸ்சும் ஒருமாதிரியாக வீட்டிற்கு வந்துவிட்டோம். குண்டன் வைத்தியசாலைக்கும் மற்றவன் தன் வீட்டிற்கும் நடையைக்கட்டியிருந்தனர்."பாவமடா அவன். நாளைக்கு அவனைப்பார்க்க போகனும்" என்று குடிபோதையில் உலறினான் நட்ஸ். அதுமட்டும்தான் என் காதுகளுக்கு கேட்டது. இப்போ என் சிந்தனையேல்லாம் நாளை வீட்டுற்கு வரவிருக்கும் பொலிஸ்ஸை எப்படி தடுப்பது என்பதுதான். இது சுலபமான விடயமல்ல. அவர்கள் வந்தால்.... "உங்கள் மகன் நேற்று டிஸ்கோவிலே பிரச்சனைப்பட்டார். அவருக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை"என்று கூறப்போகிறார்கள். இதைக் கேட்டதும் அம்மா அப்படியே ஆடிப்பேய்விடுவார். இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.


மறுநாள்காலை நட்ஸ் எழமுதல் எழுந்து வீட்டிற்கு சற்று தயக்கத்துடன் சென்றேன். நேரம் என்னவோ காலை 11மணியிருக்கும். வீட்டுக்குள் சென்றதும் அம்மா சற்றுபதற்றத்துடன் வெளியே வந்தார். "என்னடா காலையில 9 மணிபோல 2 போலிஸ் வந்தாங்கள். அப்பாவேற வேலைக்கு போயிட்டார். நான்தான் இருந்தனான். அவங்கள் ஏதோ எல்லாம் சொன்னாங்கள் எனக்கு ஒன்டுமே விழங்கழ. சொல்லி சொல்லி களைத்தவங்கள் போயிட்டுவாரம் என்று சொல்லீட்டு போயிட்டாங்கள் என்னவிசயமோதெரியல
ஒருமுறை உன்பெயரை செல்லிக்கூட ஏதோ கதைத்தவன். என்னவிசயம்" என்று கேட்டாள் அம்மா. அவ்வளவுதான் நான் சாதாரனமாக கூறினேன்."அதுவா நான் நேற்று நடராஜா வீட்டபோகும்போது என்னோட பள்ளிக்கூடத்தில படித்த அவன் என்னைக்கண்டு சுகம்விசாரித்தான். அப்போ நான் இப்ப வாகனம் சம்மந்தமான தொழிற்கல்விபடிக்கிறதா சொன்ன போது "ஏன்டா நீ தொழிற்கல்விபடிக்கிறாய் என்னைமாதிரி பொலிஸ்ஸாக வர படிக்கலாமே என்று கேட்டவன் நான் மறுப்புச்சொல்ல இல்லை நான் உன்னுடைய பெற்றோருடன் வந்து கதைக்கிறன் என்டுசொன்னவன். அதுதான் காலையில கிடைத்த இடைவேளைக்கு இங்கவந்திருப்பான்." என்று சொன்னேன் சற்றும் தயங்காமல்.


"அட அப்படியாவிசயம்" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அம்மா. "பாவம் அவன் பொலிஸ் உடுப்பில வந்ததால பயந்து போயிட்டன் என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பான்." என்று வெட்கி வீட்டினுள்ளே நடந்தாள் அம்மா. என் வெடி நன்றாகவே வெடித்ததால் "அம்மா நான் ஒருக்கா இந்த கடைக்கு பேயிட்டு வாரன் என்று கூறியவாரே " வெளியேறினேன். நேராக டெலிபோன்பூத்தை நோக்கிநடந்தேன். என் அதிஸ்டம் அப்பாவுக்கு இன்று வேலை. வந்த போலிஸ்காரங்கள் வயது போனவர்கள் அல்ல. அதைவிட பெரியவிடயம் எங்கள் அம்மாவுக்கு போயிட்டுவாரம் என்பதைத்தவிர டொச்சில் வேறு ஒருவார்த்தையும் தெரியாதது. இப்படி எல்லாம் கூடிவந்ததை குட்டையை குழப்புவதுபோல நடராஜன் குழப்பிவிடக்கூடாதல்லவா அதற்காகத்தான் அவனுக்கு கோல் பண்ண நடந்தேன்.


இப்போ எல்லாம் கூறியாகிவிட்டது.அவனும் ஓகே சொல்லிவிட்டான். இப்போதுதான் எனக்குக் கேட்கத் தோன்றியது. "குண்டன் எப்படியிருக்கிறான்?" "ம்... பெரிசாக்காயம் ஒன்டுமில்லை நாளைக்கு விட்டுவிடுவாங்கள் போலயிருக்கு" என்று பதில் வந்தது. சரி நான் சொன்னத மறக்கவேண்டாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு வெளியேவந்தேன். அப்போது ஒரு குரல் "சயீ" என்றது. யார் என்று திரும்பிப்பார்த்தபோது எங்கள் வீட்டிற்கு இரண்டுவீடு தள்ளி இருக்கும் வனிதா அக்கா. "என்னடா சயீ உன்னை போலிசே வந்து போலிசுக்கு படிக்கக்கேட்டதாம் நீதான் மாட்டன் என்டிட்டியாம் ஏன்டா?" என்று அன்பாக வினாவினாள். தட்டுத்தடுமாறி " என்ன! யார் சொன்னது?." என்று கேட்டபோது "உன்ற அம்மா இப்பதான் வீட்டுக்கு போன் செய்து சொன்னவா" என்றாள் அவள். ஜயோ அம்மா..மா..மா..மா..மா..மா..மா.

  • நடந்தவை.......நடக்கின்றவை......நடக்கப்போகின்றவை..... (யாவும் கற்பனையல்ல.)


தர்சன்..


READ MORE - இன்றுதான் எனக்கு விடுதலை

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை

வருகைகள்

Online Users