குழந்தைத்தனம்

2005/10/20

ஏனோ தெரியவில்லை வழமைக்குமாறான இந்த காரியத்தை இன்று செய்ய எத்தனிக்கின்றேன். அதுவும் என் வீட்டில்.எப்போதாவது என் ரஷ்யநன்பனின் வீட்டில் செய்வது வழக்கம்தான். எனினும் என் வீட்டில் வைத்து செய்வது இதுவே முதல்தடவை. அதனால் சற்று நெருடலாகவே எனக்கு இருந்தது. நான் அதை செய்ய துடித்தாலும் என்மனதில் அப்பப்போ எதிர்மனையாக "இது உனக்கு இந்த வயதில் தேவையா?" என்று கேள்வி எழவே செய்தது. அதுமட்டுமா அப்படி ஆசையாய் இருந்தால் வழமைபோல் உன் நன்பனின் வீட்டில் வைத்து செய்யவேண்டியதுதானே. இங்கே எதற்காக செய்யத்துடிக்கிறாய் என கேள்விகேட்பதுவேறு. எனக்கென்னவோ அதில் உடன்பாடு இருந்தாலும். நன்பனிடம் சொல்லிவிட்டோமே அவன் தற்போது வீட்டிற்கு வந்துவிடுவானே, இப்போதுபோய் இல்லை வேண்டாம், பிறகு ஒரு நாள் வைத்துக்கொள்வோம் என்று எப்படி சொல்வது. என்ற தயக்கத்தினால் நானும் தயாராகவே இருந்தேன்.


ஆனாலும் என் எதிர்மனையான மனம் என்னை விடுவதாயில்லை.மூத்த பிள்ளைக்குகூட 12 வயதாகிவிட்டது. சின்னவள் ஒருத்தி கைக்குழந்தையாய் வேறு, அவர்களை அவர்களின் தாயோடு பாட்டிவீட்டிற்கு அனுப்பிவைத்த இந்த சந்தர்பத்தில் இதை செய்யத்துடிக்கிறாயா? என்ற கேள்விகள் என் ஆசைக்கு எதிராக எழுந்தவண்ணமே இருந்தது. ஆனாலும் இப்படியான ஒரு சந்தர்பத்துக்காககத்தானே காத்திருந்தேன். நான் இதை இப்போது செய்யாமல் என்னவள் முன்னும் என் குழந்தைகள் முன்னுமா செய்ய முடியும்? அவர்கள் என்னை நக்கலடிக்கமாட்டார்களா? இதனால் எவ்வளவு பணத்தை நான் இழந்திருப்பேன். அல்லது பெற்றிருப்பேன். அதுவெல்லாம் இருக்கட்டும் அதில் எனக்கு எவ்வளவு விருப்பம் தெரியுமா? அதையெல்லாம் விட முடியாது. இது இன்றா நேற்றா என் ஜந்து வயதிலிருந்து செய்து வந்ததாயிற்றே. என்ன திருமணத்திற்குப்பிறகு எப்பவாவது ரஷ்யநன்பனின் வீட்டில் செய்வது வழக்கம். ஆனாலும் இப்போ கிட்டத்தட்ட ஒரு நான்கு ஜந்து வருடங்களாக தொடவில்லை. நேற்று என் நன்பனை மீண்டும் கண்டபோது இருவரும் பேசி இன்று என் வீட்டில் செய்வதாக முடிவெடுத்தோம். இதில் என்ன தவறிருக்கிறது. இதுதான் சந்தர்ப்பம். விட்டுவிடாதே நிரோஜன் விட்டுவிடாதே என திடமாக என் மனம் குறிவிட்டது.


என் மகன் இதை செய்யும்போது என்கைகள் துடித்தும் எத்தனை தடவை என்னைக்கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். அதற்கெல்லாம் காரணம் இந்தப்பாழாய்போன குடும்பத்தலைவன் பெறுப்புத்தான். எனக்கு எல்லாம் எவன் திருமணம் செய்து வைத்தது? அது சரி யார் செய்து வைத்தார். நானாய் என் பதினேட்டாவது வயதில் தேடிக்கொண்டதுதானே.அம்மா அப்பாவோடு எத்தனை சண்டைகள் இதற்காய். ம்...... அதுவும் ஒருகாலம். ஒருவேளை செய்யவேண்டிய வயதில் செய்யாமல் விட்டதால்தான் இப்போது செய்யத்துடிக்கிறேனா? ச்சீ..... அப்படியென்றுமில்லை நான் இதற்கு அடிமையாகிவிட்டேன். என நினைக்கிறேன்.


ஆகா! வந்துவிட்டான் அழைப்புமணியை அழுத்துவது அவன்தான். ஆவலுடன் ஓடிசென்று கதவைத்திறந்தேன். அவனேதான். தன் கைகளைநீட்டிய வண்ணமே ஹாய் சொன்னான். நானும் கைகளை கொடுத்து அவனை உள்ளே அழைத்து வரவேற்பேறையில் உட்காரவைத்தேன். அவன் "தொடங்குவமா?"என ஆவலாய்க்கேட்டான். நானும் என்ஆவலை வெளிக்காட்டிய வண்ணம் அவன் கைகளைப்பார்த்தேன். ஆகா !!!! ஆகா !!!! எத்தனை சிடிகள். கிட்டத்தட்ட ஆறு ஏழு இருக்கும். ம்... இரு வாறேன் என்று சொல்லிக்கொண்டே ஆவலாய் என் மகனின் அறைக்கு வேகமாகநடந்தேன். அவன் படுக்கைக்கு கீழே அந்தப்பெட்டி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவனருகே வந்து "எவ்வளவு காசு வைப்போம்?" என கேட்டேன். அவனும் 10யூரோ என்றான். சரி என்றவாறே தொலைக்காட்சிப்பெட்டியைபோட்டு அதிலே அந்தபெட்டியிலிருந்து எடுத்த PlayStation பெட்டியை இணைத்து,அவன் கொண்டுவந்த சிடியிலே எங்களுக்குபிடித்த விளையாட்டை போட்டு விளையாட தொடங்கினோம். எத்தனை ஆண்டுகள் விளையாடவிட்டால் என்ன !!! என் கைகள் துள்ளிக்குதித்துக்கொண்டு உதைபந்தாட்டம் விளையாடியது.


- தர்சன்-
READ MORE - குழந்தைத்தனம்

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users