வணக்கம், நான் என் சூழழுடன் நடத்தும் பேராட்டத்தில் நான் கண்டவற்றை எழுதவேண்டும் என நினைத்தேன். அதன் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்.
அப்பாடா இன்றுதான் எனக்கு விடுதலை..... சொட்டைத்தலையன் சிம்மர்மானிடமிருந்து... ஆனால் மீண்டும் திங்கட்கிழமை அதே மோட்டத்தலையன்தான். உம்......... என்ன செய்வது கட்டாயமாக தொழிற்கல்விபடித்துமுடிக்கவேண்டும்.இன்னும் இரண்டு வருடங்கள் இதே தொல்லைதான். ஆனால் இன்று ஒரு சிறிய சந்தோசமான நாள். காரணம் வெள்ளிக்கிழமை. இரண்டுநாட்கள் எனக்கே எனக்கானநாள். சரி... இன்று இரவு என்ன செய்வது. என்று யோசித்துக்கொண்டிருந்தபோது ஞாபகத்தில் வந்தவன் என் ஒன்றைவிட்ட மாமன். அவன் என்னமாமன் என்னிலும்பார்க்க ஒரு வயது கூடியவன். முறைப்படிதான் மாமன். ஆனால் எனக்கு அவன் நல்ல நன்பன். அவனை தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.
"அம்மா நான் இன்டைக்கு நடராஜன் ரூமில போய்தங்கப்போறேன். அவன் தன்னுடன் வந்துதங்கேன் என்று கேட்டான். போகட்டா?" என்றுகேட்டேன். அம்மா சற்றும் யோசிக்காமல் "சரிபோயிட்டு வா" என்றாள் நடராஜன் மேலுள்ள நம்பிக்கையால். என்கல்லவா தெரியும் அவன் பசுந்தோல் போற்றிய புலி என்பது. போத்தல் போத்தலாக குடித்துவிட்டு ஒரு சுவிங்கத்தை சப்பியவாறே எங்க அப்பாவுக்கு சல்யூட் அடிப்பான். அப்படிப்பட்ட பச்சைக்கள்ளன். எனினும் அவன் செய்யும் குறும்புகள் அவனைமட்டுமே பாதிக்கும். மற்றவர்களை பாதிக்காது. அதனால்தான் அவன் வண்டவாளங்கள் வெளிவராமலிருக்கின்றன. "சரி அம்மா நான் போயிட்டு நாளைக்கு வாரன்." என்று கூறியவாறே என்தோள் பைக்குள் சில உடைகளை மடித்துவைத்துக்கொண்டு புறப்பட்டேன் நடராஜன் ரூமைநோக்கி. நடராஜனின் ரூம் எங்களின் வீட்டிலிருந்து நான்கு தெரு தள்ளித்தான் இருக்கிறது.
அவன் குடுக்கும் முன்னுறு யூரோவுக்கு இந்த நகரத்தில் இப்படிப்பட்ட சிறிய ரூமைத்தவிர வேற ஏதுவும் கிடைக்காதுதான். அச்சிறிய அறையினுள் அப்பாடா எத்தனை பொருட்கள். கண்களுக்கு அது ஒரு சிறிய களஞ்சிய அறைபோல் தோற்றமளிக்கும். ஒரே ஒரு மூலையில் அவன் தூங்குவதற்கான கட்டில் இருக்கிறது. அவ்விடம்மட்டுமே சற்று பிரகாசமாக காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஒரு ரூமில் அவன் எப்படித்தங்குகிறான். அதுசரி அவன் எப்போது அங்கே தங்கினான். வருடத்தில் முன்னூறு நாட்கள் நன்பர்களின் வீடுகளிலேயே படுத்துத்தூங்கிவிடுவான். பகலில் வீட்டுப்பக்கமே வருவதில்லை. எப்போதாவது வந்து தூங்கவும் கடிதங்களின் வருகைக்கான முகவரிக்கும்தான் அந்த ரூம். எங்கள் வீட்டிற்கு வா என்றால் "முடியாது" என்று ஒருவார்த்தைதான். அவனுக்குத் தெரியும் எங்களின் வீட்டிற்கு வந்தால் அவன் நினைத்த நேரம் வெளியே செல்ல முடியாது. அதுமட்டுமல்ல அவனின் சுகந்திரமான ஏனைய செயற்பாடுகளும் தடைப்படும் என்பது. அவன் புத்திசாலி...
ரூம் கதவை திறந்து உள்ளே சென்றேன். என்னைக்கண்டவுடன் "வாடா வா கொம்மா கொப்பா என்னவாம்?" என்று அன்போடு கேட்பது போல் கேட்டாலும் எனக்கு தெரியும் அது வம்புக்கேள்வி என்பது. அதனால் "ம்...... சுகமாயிருக்கினம். நீ ?" "ம்... ஏதோ உயிரோடு இருக்கிறன்." என்று பதில் வந்தது. அதைத்தொடர்ந்து ஊரிலுள்ளதன் அம்மாவுடன் தொலைபேசியில் கதைத்தது தொடக்கம் இங்கேயுள்ள உறவினர்கள்வரை எப்படி இருக்கிறார்கள் என்று சொல்லியே என்னை அறுத்துவிட்டான். "நில்லடா இப்ப என் ப்ரண்டெல்லாம் வருவாங்க வந்தவுடன் நாங்க போவம்" என்றான். அப்பாடா இப்பவாவதும் அதைப்பற்றிசொன்னானே என்று பெருமூச்சு வெளியேரியது. அவனுக்கென்னவோ இது அடிக்கடி செல்லுமிடம்தான். அனால் நான் எப்போதாவது தான் செல்வேன். "டேய் சாப்பிட்டியா?" "இல்லை" "நீ?" "இல்லை போகும்போது கடையில சாப்பிடுவம் சரியா?" "சரி" "ஆனால் நீதான் காசு குடுக்கனும்." ஆகா.... முறையாக மாட்டுப்பட்டுவிட்டேனே. இன்று இவனும் இவன் ப்ரண்டுகளும் சேர்ந்து என்னை உருட்டியேடுக்கப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது அவனின் தொடர்ந்த கதையிலிருந்து. எனினும் என்ன செய்ய... தொழிற்கல்விபடிக்கும் போது தரும் பணம் இதற்கு பயன்படுத்தாமல் வேறு எதற்கு. "சரி" என்றேன்.
அழைப்புமணி ஒலித்தது...... கதவை நான்தான் திறந்தேன். நட்சின் ப்ரண்டுகள். ஆம் நடராஜன்தான் நட்ஸ். பெயரை வெள்ளையர்கள் கூப்பிடுவதற்காக அப்படி சுருக்கிவிட்டான். இல்லை நறுக்கிவிட்டான். ஆனால் தற்போது வெள்ளையர்கள் இவனை நா..டா...ரா..ஜன் என்றுதான் கூப்பிடுகிறார்கள். அப்போ இந்த நட்சை... கூப்பிடுவது வந்திருக்கும் அவன் நன்பர்களும். சிலவேளைகளில் நானும்தான். "வாங்கடா வாங்க" நட்ஸ்குரல்தான். "வாங்கடா" நானும் என்பங்குக்கு கூப்பிட்டேன். அந்த சின்ன அறைக்குள்ளே நான் அதுவரைபாத்திறாத இரண்டு மிருகங்கள் நுழைந்தது. ஆம் அவர்கள் போதுநிறமுமல்ல அதிலும் சற்றுகுறைவுதான் ஆனால் அவர்கள் தங்களின் தலைக்கு பழுப்புநிற டை அடித்தது மட்டுமல்லாமல் காதுகளில் கடுக்கன் வேறுகுற்றியிருந்தார்கள். சகிக்கமுடியவில்லை. "என்னடா சயீ நீயும் இன்டைக்கு எங்ககூட வாரியா" கேட்டான் அந்த குண்டன். "ஓம் ஏண்டா" "இல்ல சும்மாதான் கேட்டேன்" என்றான் மீண்டும் குண்டன். இதற்கிடையில் முந்திரிகொட்டை நட்ஸ் "அவன்தான் இன்டைக்கு எங்களுக்கு எல்லாம் செலவு செய்யப்போகிறான்" என்று கூறி "வாங்கடா இறங்குவம்" என்றான்.
உள்ளே நுழைந்தோம். கண்ணைப்பறிக்கும் கலர் கலர் விளக்குகள் அந்தரத்தில் தொங்கியவாரே காட்சியளித்தது. சென்றமுறை சென்றபோதுகூட சற்று இருண்ட நிலையில் காட்சியளித்த இந்த டைமன் டிஸ்கோ இந்த முறை சற்றுபிரகாசிக்கவே செய்தது. ஓ.... ஒருவேளை கிறிஸ்மஸ் கொண்டாட்டம் காரணமாக மேலதிகமான மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்களாம். அது சரி இங்கே வந்துவிட்டோம். இப்போ வெளிச்சமா அல்லது இருளா முக்கியம். வந்த காரியத்தை கவனிப்போம். திரும்பிபார்த்தேன்... நட்ஸ்சை காணவில்லை. இவங்கள் எங்கே? ம்..... காணவில்லை சுற்றி சுற்றி பார்த்தேன். "டேய்" அதே குரல்.
திரும்பிப்பார்த்தேன். " எங்கடா போனனி?" அப்பாடியோ குண்டன் வாய்குள் அக்கேள்வி மட்டுமல்ல குடிவகை நாற்றமும் சேர்ந்தே வந்தது. "நான் இங்க பார்த்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் பாவிகளா விட்டுவிட்டுபோயிட்டிங்கள். மற்றவங்கள் எல்லாம் எங்கே?" இப்போ குண்டனிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. தொடர்ந்து நடந்தான் அந்த சதுரவடிவான மதுஅருந்தும் இடத்திற்கு. அங்கே ஏற்கனவே ஒரு ரவுண்டில் இருந்தான் நட்ஸ்சும் அவன் ப்ரண்டும். ம்... எனக்காகவும் ஒரு பெரிய அளவிலான கிளாஸ்சில் பியர் காத்திருந்தது. "வாடா வா.... எடுத்தடி" இது நட்ஸ். நான் மட்டும் என்ன சின்னப்பையனா! சென்றமுறை வந்தபோது மூன்று கிளாஸ் பியர் குடித்தேன். இந்தமுறையும் அத்தனை முடியாவிடினும் ஒன்றாவது இறங்காதா என்ன? ஆனால் முடியவில்லை. ஒன்றே இயலாமலிருந்தது. ஆனால் நட்ஸ்சும் அவன் பிரண்டுகளும் இரண்டாவதை நிறைவுசெய்தார்கள். அவர்களின் பழிப்புக்கு ஆலாகமல் இருக்கு வேண்டுமல்லவா அதனாலே நான் என் முதல் கிளாஸ் பியரை ஒருமாதிரியாக நிறைவுசெய்தேன்.
"எனக்குப்போதும் வாங்க மற்றவேலையப்பாப்போம்." "என்னடா ஒன்டுபோதுமா?" என்றான் நட்ஸ். ஓம் ஓம் போதும். வாங்க வாங்க என்று கூறியவாரே அந்த Usher பாடலுக்கு ஆடியவாரே நான் அந்த ஜோதியில் ஜக்கியமானேன். இசையின் வேகம் அதிகரித்தது. என் உடல் என்னுடைய கட்டுப்பாட்டை மீறி ஆட்டம்போட்டுக்கொண்டிருந்தது. அந்தநேரம்தான் அக்குரல் "அம்மாமாமா..... " என்று கேட்க திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தேன். குண்டன்தான்..ஆனால் குண்டனைஇப்ப குனியவைத்து குத்திக்கொண்டிருந்தார்கள் நான்கு வெள்ளையர்கள். காரணம் புரியவில்லை நட்ஸே தன் கொசு உடம்பைவைத்துக்கொண்டு திணரிக்கொண்டிருந்தான் ஒரு வெள்ளையனின் கைப்பிடியில். மற்றவனைக்காணவேயில்லை. ஓ....... அவன் இப்போது கீழிருந்து எழுகின்றான். ஓரே கூச்சல்... நான் இப்போது அருகேவந்துவிட்டேன். "ஆ......." ஆம் என்னையும் மற்றவர்களையும் அந்த டிஸ்கோவில் வேலைசெய்யும் பாதுகாவலர்கள் கைகளை மடக்கிப்பிடித்துக்கொண்டு தர தரவென வெளியே இழுத்துவந்தார்கள். அந்நேரம் நட்ஸ்சுக்கு ஒரு அடியும் விழுந்தது. அந்த எருமைமாடுமாதிரியிருந்த பாதுகாவலன் பிடித்ததில் என்கைகள் சரியாக வலித்தது.
வந்துவிட்டார்கள்... இவர்களைதான் நாங்கள் செல்லமாக மாமா என்றழைப்போம். இவர்களிடம் அந்தபாதுகாவலர்கள் எங்களை ஒப்படைத்தார்கள். கேட்டான் என்னிடம் "எங்கே உனது கடவுச்சீட்டு?" எடுத்து கொடுத்தேன். ஒருமுறை ஏற இறங்கபாத்துவிட்டு ம் என்றான். " இங்கே என்ன செய்கிறாய்?" "தொழிற்கல்வி படித்துகொண்டிருக்கிறேன்." "எங்கே?" அடுக்கடுக்காக கேள்விக்கணைகளைத்தொடுத்தான்.
"இங்கே இரு" என்று உரத்த கூரலில் கூறிவிட்டு சற்று தள்ளிச்சென்றான். இப்போது நான் நட்ஸ்சைப்பார்த்தேன். ஒரு புன்சிரிப்பு... அதற்கு அர்த்தம் எனக்குத்தெரியும். பாரடா நீல பாஸ்போட்காரன் எனக்கும் டொச்சப்பாஸ் வைத்திருக்கும் உனக்கும் ஒரேமரியாதைதான் எனநினைத்துத்தான் அந்தப் புன்சிரிப்பு. "ம்" அவனும் அவன் பிரண்டுகளும் சரியாக எரிந்தது எனக்கு. குண்டன்பாவம் நல்ல அடிவாங்கியதால் இப்போதுதான் அவனை வாகனத்தில் ஏற்றிகொண்டு வைத்தியசாலைக்கு போயிருந்தார்கள். அவனைநினைக்க எனக்கு கவலைவரவேயில்லை இப்போ என்கவலையேல்லாம் நாளை வீட்டிற்கு பொலிஸ் வரப்போகிறதே என்பதுதான்.
இரவு " நானும் நட்ஸ்சும் ஒருமாதிரியாக வீட்டிற்கு வந்துவிட்டோம். குண்டன் வைத்தியசாலைக்கும் மற்றவன் தன் வீட்டிற்கும் நடையைக்கட்டியிருந்தனர்."பாவமடா அவன். நாளைக்கு அவனைப்பார்க்க போகனும்" என்று குடிபோதையில் உலறினான் நட்ஸ். அதுமட்டும்தான் என் காதுகளுக்கு கேட்டது. இப்போ என் சிந்தனையேல்லாம் நாளை வீட்டுற்கு வரவிருக்கும் பொலிஸ்ஸை எப்படி தடுப்பது என்பதுதான். இது சுலபமான விடயமல்ல. அவர்கள் வந்தால்.... "உங்கள் மகன் நேற்று டிஸ்கோவிலே பிரச்சனைப்பட்டார். அவருக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை"என்று கூறப்போகிறார்கள். இதைக் கேட்டதும் அம்மா அப்படியே ஆடிப்பேய்விடுவார். இதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே தூங்கிவிட்டேன்.
மறுநாள்காலை நட்ஸ் எழமுதல் எழுந்து வீட்டிற்கு சற்று தயக்கத்துடன் சென்றேன். நேரம் என்னவோ காலை 11மணியிருக்கும். வீட்டுக்குள் சென்றதும் அம்மா சற்றுபதற்றத்துடன் வெளியே வந்தார். "என்னடா காலையில 9 மணிபோல 2 போலிஸ் வந்தாங்கள். அப்பாவேற வேலைக்கு போயிட்டார். நான்தான் இருந்தனான். அவங்கள் ஏதோ எல்லாம் சொன்னாங்கள் எனக்கு ஒன்டுமே விழங்கழ. சொல்லி சொல்லி களைத்தவங்கள் போயிட்டுவாரம் என்று சொல்லீட்டு போயிட்டாங்கள் என்னவிசயமோதெரியல
ஒருமுறை உன்பெயரை செல்லிக்கூட ஏதோ கதைத்தவன். என்னவிசயம்" என்று கேட்டாள் அம்மா. அவ்வளவுதான் நான் சாதாரனமாக கூறினேன்."அதுவா நான் நேற்று நடராஜா வீட்டபோகும்போது என்னோட பள்ளிக்கூடத்தில படித்த அவன் என்னைக்கண்டு சுகம்விசாரித்தான். அப்போ நான் இப்ப வாகனம் சம்மந்தமான தொழிற்கல்விபடிக்கிறதா சொன்ன போது "ஏன்டா நீ தொழிற்கல்விபடிக்கிறாய் என்னைமாதிரி பொலிஸ்ஸாக வர படிக்கலாமே என்று கேட்டவன் நான் மறுப்புச்சொல்ல இல்லை நான் உன்னுடைய பெற்றோருடன் வந்து கதைக்கிறன் என்டுசொன்னவன். அதுதான் காலையில கிடைத்த இடைவேளைக்கு இங்கவந்திருப்பான்." என்று சொன்னேன் சற்றும் தயங்காமல்.
"அட அப்படியாவிசயம்" என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் அம்மா. "பாவம் அவன் பொலிஸ் உடுப்பில வந்ததால பயந்து போயிட்டன் என்னைப்பத்தி என்ன நினைச்சிருப்பான்." என்று வெட்கி வீட்டினுள்ளே நடந்தாள் அம்மா. என் வெடி நன்றாகவே வெடித்ததால் "அம்மா நான் ஒருக்கா இந்த கடைக்கு பேயிட்டு வாரன் என்று கூறியவாரே " வெளியேறினேன். நேராக டெலிபோன்பூத்தை நோக்கிநடந்தேன். என் அதிஸ்டம் அப்பாவுக்கு இன்று வேலை. வந்த போலிஸ்காரங்கள் வயது போனவர்கள் அல்ல. அதைவிட பெரியவிடயம் எங்கள் அம்மாவுக்கு போயிட்டுவாரம் என்பதைத்தவிர டொச்சில் வேறு ஒருவார்த்தையும் தெரியாதது. இப்படி எல்லாம் கூடிவந்ததை குட்டையை குழப்புவதுபோல நடராஜன் குழப்பிவிடக்கூடாதல்லவா அதற்காகத்தான் அவனுக்கு கோல் பண்ண நடந்தேன்.
இப்போ எல்லாம் கூறியாகிவிட்டது.அவனும் ஓகே சொல்லிவிட்டான். இப்போதுதான் எனக்குக் கேட்கத் தோன்றியது. "குண்டன் எப்படியிருக்கிறான்?" "ம்... பெரிசாக்காயம் ஒன்டுமில்லை நாளைக்கு விட்டுவிடுவாங்கள் போலயிருக்கு" என்று பதில் வந்தது. சரி நான் சொன்னத மறக்கவேண்டாம் என்று கூறி தொலைபேசியை வைத்து விட்டு வெளியேவந்தேன். அப்போது ஒரு குரல் "சயீ" என்றது. யார் என்று திரும்பிப்பார்த்தபோது எங்கள் வீட்டிற்கு இரண்டுவீடு தள்ளி இருக்கும் வனிதா அக்கா. "என்னடா சயீ உன்னை போலிசே வந்து போலிசுக்கு படிக்கக்கேட்டதாம் நீதான் மாட்டன் என்டிட்டியாம் ஏன்டா?" என்று அன்பாக வினாவினாள். தட்டுத்தடுமாறி " என்ன! யார் சொன்னது?." என்று கேட்டபோது "உன்ற அம்மா இப்பதான் வீட்டுக்கு போன் செய்து சொன்னவா" என்றாள் அவள். ஜயோ அம்மா..மா..மா..மா..மா..மா..மா.
தர்சன்..
பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்
-
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில்
ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது,
அதிக நீர...
9 months ago
0 மறுமொழி:
Post a Comment