இன்று ஒரு கடிதம்.....

2008/11/06


ன்று ஒரு கடிதம்..... நினைவுகளால், துடிப்புக்களால், உணர்வுகளால், வலிகளால் மனது கனத்திருக்க, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.காகிதத்தில் கண்ணீர் துளி விழ, காட்சிகள் கண் முன்னோட, பேனாவை விரல்கள் அழுத்தும் விசை குறைய, இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எத்தனையோ கண்டுவிட்டேன் அச்சின்னஞ்சிறு வயதிலேயே. எனை சுற்றி வந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராய் மறைந்து போவதையும், மறைந்தவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதையும், கண்டுவிட்டேன். 


எத்தனையோ கண்டுவிட்டேன்....


பக்கத்து வீட்டு பாப்பா, எதிர் வீட்டு பாட்டி, அண்டைவீட்டு அங்கிள், அதற்கடுத்த வீட்டு அண்ணா, ஏன் எனது அக்கா இப்படி எத்தனை பேர் போயிருப்பார் போரினாலே.


அங்காங்கே குண்டுவிழுந்து நிலத்தில் குழிவிழுந்த காட்சிகளும். ஆமி வந்தால் அடிக்க வயலினூடே வரிசையாய் பொடி நடையாய் புலியாய் புழுதி கிளப்பி போகும் அண்ணாமாரும் அக்காமாறும், அவர்களை பார்த்து கண்ணீர் விடும் எண்ணில்லா மனங்களும், காட்சிகளாய் என் முன்னே வந்து நிற்க.... ஒரு கடிதம் எழுதுகிறேன்.


பாடசாலையிலே சின்னஞ்சிறுவர் நாம் சொந்த உழைப்பினிலே பங்கர் கிண்டியதும், ஓடியாடி விளையாடியதையும் விட சுப்பர்சோனிக்குக்கு பயந்தோடி பங்கருக்குள் பதுங்கியது, பங்கருக்குள் இருந்த பாம்பு கடித்து நன்பன் இறந்ததுவும் நினைவுகளாய் அலைமோத... இன்று ஒரு கடிதம் எழுதுகிறேன்.


எழுத்துக்கள் முற்றுப் புள்ளியுடன் மோதியும், ஆச்சரிய குறியிடம் அடிபட்டும், கேள்விக்குறியிடம் சிக்குண்டும், எதுகை மோனை போல் சலசலத்தும் வரைகிறது காகித்தில்... "வேண்டாம்" என்று.


நவாலி வெளியிலே அடுக்கடுக்காய் அந்த சகடை போட்ட எட்டும் காற்றில் பறந்து வந்த காட்சிகளும், நெஞ்சுநோவு என்று வழியிலேயே குந்தி இருந்து எம்மை தேவாலத்தை அடையவிடாத காப்பாற்றிய அந்த பெருசும் காட்சிகளாய் வர.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


அப்பாவும் ,அம்மாவும், அக்காவும் , அண்ணாவும், சுற்றமும் அகதியாய் அன்று ஓடியதன் கால் வலி இன்று உணர்ந்திட.. எழுதுகிறேன் ஒரு கடிதம்.


நெட்டைக்கால் தாத்தாவுக்கு கட்டைக்கால் பொருத்தியதும், கம்பீரமாய் நின்றவர் கூனிகுறுகியதும் நினைவுகளாய் மனதில் விழ... எழுதுகிறேன் ஒரு கடிதம்.


வேந்தன் மாமா வேங்கையாய் ஆகியதும் வெம்பி வெம்பி நாம் அழுததுவும்
பயந்தொடிய அக்காலங்களும் போராட சென்றவர்கட்டு சுட்டனுப்பிய பருத்தித்துறை வடையும் ஞாபகங்களாய் இரைமீட்க... எழுதுகிறேன் ஒரு கடிதம்.தாத்தா மென்று துப்பிய வெற்றிலை சிவப்பு கறை கண்டு அலரித்துடித்த அப்பத்தா- பிரிதொரு நாளில், அப்பாவியாய் குருதிகளுக்கு நடுவில் உறங்கிய காட்சிகளும் நினைவில் வர.... எழுதுகின்றேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"அக் கொடுமைகளை நித்தம் நான் கண்டுகொண்டிருந்தால் எனக்கும் ஒருவித வெறி வந்திருக்கும்... ஆனால் பாதியிலே இங்கு வந்ததால் பயம்தான் வந்ததுவோ? தெரியவில்லை..


ஆதலினால் பயத்துடன் எழுதுகிறேன் ஒரு கடிதம் "வேண்டாம் என்று"
மதிப்புக்குறியவர்களுக்கு, 
என்னை ஜெர்மன் ராணுவ சேவைக்கு அழைத்த அழைப்புக் கண்டேன்.
என்னுடைய நாட்டில் ஏற்பட்ட போர் சூழல்களால் நானும் என்னுடைய பெற்றோர்களும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உடலளவில் நான் ஜெர்மன் நாட்டு படையில் சேர தகுதி பெற்றிருந்தாலும் மனதளவில் நான் தயாரில்லை. எனினும் எனக்கு தெரியும். கட்டாய சேவை செய்தே ஆகவேண்டும் என்று. ஆகவே எனக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ராணுவ சேவையை சமூகசேவையாக மாற்றிதருமாறு வேண்டுகிறேன்.

வேண்டுதலுடன்
ஜீவன்.


(யாவும் கற்பனையல்ல)

7 மறுமொழி:

யாவும் கற்பனையில்லாத கடிதம் சொல்லும் சேதி அருமை.
கட்டாயசேவையை சமூக சேவையாக மாற்றிக்கொண்டு தங்கள் பணிகளைத் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.

- சாந்தி -

ம் ...

சாந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இந்த இக்கட்டான நிலைமையை கடந்து சில வருடங்கள் ஓடிவிட்டன.

என்ன ம்.... சினேகிதி?

Senthil said... [Reply]

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

rajeepan said... [Reply]

உன்மையைச் சொல்லி இருக்கின்றாய்..உனது எழுத்துக்களை தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கின்றது..தொடர்ந்து எழுதவும்..

நன்பா, நன்றி.. நான் எழுதுவது இருக்கட்டும் உன்னுடைய எழுத்துக்கள் எங்கே?

நிச்சயமாக நான் எழுதுவேன்.

 
 
 

பிரிவுகள்

காப்புரிமை

இங்கு உள்ள அனைத்து பதிவுகளும் சரியான முறையில் காப்புரிமை பெற்றவை
MyFreeCopyright.com Registered & Protected

வருகைகள்

Online Users